சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணை; தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணை; தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
UPDATED : மார் 03, 2025 01:21 PM
ADDED : மார் 03, 2025 12:17 PM

புதுடில்லி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னுடன் பாலியல் உறவு வைத்து, பிறகு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார்; இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், சீமான் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என கருத்து கூறியிருந்தது. மேலும், வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்கவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து வழக்கு விசாரணை வேகம் பிடித்தது. போலீசார், சீமானுக்கு சம்மன் அனுப்பி ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். விஜயலட்சுமியிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். வீட்டில் சம்மன் ஒட்டச்சென்றபோது, போலீசாருக்கும், சீமான் வீட்டு ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. இதையடுத்து, தன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரி, சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 03) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'புகார் அளித்த நடிகை இதற்கு முன் மூன்று முறை வழக்கை திரும்ப பெற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றுடன் அரசியல் காரணமாக வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என சீமான் தரப்பில் வாதிட்டப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், சீமானுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். 'இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தீர்ப்பை வரவேற்கிறேன்!
இது குறித்து மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: நடிகையுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை, தேவையில்லை. இந்த வழக்கு எப்படி பார்த்தாலும் அவதூறு, பொய் என்று தான் முடிவு. நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை வரவேற்கிறேன். சட்டப்படி செயல்படுவோம். இந்த தடையை நாம் விரும்பி கேட்டது தான்.
உயர்நீதிமன்றத்திலேயே நாங்கள் தான் வழக்கை தொடர்ந்தோம். ஒரு முறை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சொல்கிறீர்கள். மறுபுறம் 3வது முறையாக வழக்கு தொடரும் போது திருமணம் நடந்து முடிந்தது என்று சொல்கிறீர்கள். 6 மாதத்தில் 7 முறை கரு கலைத்ததாக சொல்கிறீர்கள். 6 மாதத்தில் 7 முறை கரு கலைத்தேன் என்றால் அரிதிலும் அரிதான அவதார பிறவியாக தான் இருக்க வேண்டும்.
இந்த வழக்கை முற்றிலுமாக அழிக்க தான் முயற்சி செய்வோம். விசாரித்தாலும் எதிர்கொள்ள தயாராக தான் இருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை இந்திய நிலத்தில் இனி எந்த மகனுக்கும் வர கூடாது. என்னை நம்பி இருக்கிறவர்கள் எல்லாம் சிறிய பிள்ளைகள். இதனால் தான் வழக்கை முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.