ADDED : ஜூலை 10, 2024 04:24 AM

பெங்களூரு, : பாலியல் வழக்கில் கைதான, ம.ஜ.த., -- எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க, பெங்களூரு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா, 36. ஹாசன் அரிசிகெரேயைச் சேர்ந்த 32 வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, பெங்களூரு 42வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சூரஜ் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சிவகுமார் நேற்று விசாரித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ''மனுதாரருக்கு ஜாமின் கொடுத்தால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தி, சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது,'' என்று வாதிட்டார்.
சூரஜ் தரப்பு வக்கீலும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், சூரஜ்க்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.