ADDED : மே 03, 2024 06:49 AM

ஹாசன்: ''குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஹாசன் தொகுதியில் என் சகோதரர் பிரஜ்வல் வெற்றி பெறுவார்,'' என ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா தெரிவித்தார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:
ஹாசன் மாவட்ட ம.ஜ.த., தொண்டர்களுக்கு, எந்த குழப்பமும் இல்லை. வழக்கம் போன்று தொண்டர்கள் கூட்டம் நடக்கிறது. தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும், பிரஜ்வல் வெற்றி பெறுவார்.
பிரஜ்வல் வழக்கு குறித்து, நான் பேசமாட்டேன். அரசு அமைத்துள்ள எஸ்.ஐ.டி., விசாரணை நடத்துகிறது. ஆனால் இது ஒரு சதி என்றே, நான் கூறுவேன். பல ஆண்டுகளாக ரேவண்ணாவின் செல்வாக்கு அதிகரிக்கிறது. இதை சகிக்க முடியாமல், இப்படி செய்கின்றனர். விசாரணை முடிந்த பின், உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
நான் துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல, தொகுதி வளர்ச்சி பணிகள் தொடர்பாக, ஜனவரியில் அவரை நான் சந்தித்தேன்.
இது ஊடகத்திலும் வெளியானது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒன்றரை மாதமாக பெங்களூருக்கு என்னால் செல்ல முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.