சென்னப்பட்டணாவில் சுரேஷ்? சிவகுமார் தயக்கத்தின் பின்னணி!
சென்னப்பட்டணாவில் சுரேஷ்? சிவகுமார் தயக்கத்தின் பின்னணி!
ADDED : செப் 03, 2024 10:31 PM

கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர், மாகடி, கனகபுரா ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
சென்னப்பட்டணா தொகுதி மட்டும் ம.ஜ.த., வசம் சென்றது. அந்த தொகுதி எம்.எல்.ஏ.,வாக குமாரசாமி வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆனதால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.
நெருக்கடி
சென்னப்பட்டணா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இடைத்தேர்தலில் சென்னப்பட்டணாவில் வெற்றி பெற்று ராம் நகர் மாவட்டத்தை காங்கிரஸ் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பது துணை முதல்வர் சிவகுமாரின் விருப்பமாக உள்ளது.
இதனால் அவரே போட்டியிட ஆசைப்படுகிறார். ஆனால் அவரது தம்பியும், பெங்களூரு ரூரல் முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷை களம் இறக்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர்கள், சுரேஷின் ஆதரவாளர்கள் சிவகுமாருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதை சிவகுமாரே ஒப்புக் கொண்டு உள்ளார். “சுரேஷை களம் இறக்க அழுத்தம் வருவது உண்மைதான்.
ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டேன்,” என அவர் கூறியிருந்தார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சுரேஷை களம் இறக்க சிவகுமார் தயங்குகிறார்.
சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரசுக்கு செல்வாக்கு கிடையாது. ம.ஜ.த., வலுவாக உள்ளது. தற்போது பா.ஜ., கூட்டணியில் இருப்பதால் அக்கட்சியின் ஓட்டுகளும் விழும் வாய்ப்பு உள்ளது.
நினைப்பது என்ன?
சில மாதங்களுக்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சென்னப்பட்டணாவில் 85,000 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் அங்கு வெற்றி பெறலாம் என சிவகுமார் நினைக்கிறார்.
லோக்சபா தேர்தலில் சுரேஷ் தோற்றுப் போனார். சென்னப்பட்டணா இடைத்தேர்தலிலும் ஒருவேளை அவர் தோற்றுப் போனால், எதிர்க்கட்சியினரின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும் என்று சிவகுமார் நினைக்கிறார். இதனால் அவரே, களம் இறங்கி எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடிக்க நினைக்கிறார்.
சென்னப்பட்டணாவில் அவர் வெற்றி பெற்றால், கனகபுரா எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். அங்கு இடைத்தேர்தல் நடந்தால் சுரேஷ் களம் இறங்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக உள்ளது என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- நமது நிருபர் -