ADDED : மே 02, 2024 01:14 AM

புதுடில்லி: நம் கடற்படையின் துணைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நேற்று பொறுப்பேற்றார்.
நம் கடற்படையின் தலைமை தளபதியாக இருந்த ஹரிகுமாரின் பதவிக்காலம், ஏப்., 30 உடன் முடிவடைந்தது.
இதையடுத்து, நம் கடற்படையின், 26வது தலைமை தளபதியாக, துணைத் தளபதியாக இருந்த தினேஷ் குமார் திரிபாதி, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நம் கடற்படையின் துணைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நேற்று பொறுப்பேற்றார். இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போரில் நிபுணராக உள்ளார்.
கடந்த 1987 ஜூலை 1ல் கடற்படையில் சேர்ந்த கிருஷ்ணா சுவாமிநாதன், கடற்படையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.என்.எஸ்., வித்யுத், ஐ.என்.எஸ்., வினாஷ், ஐ.என்.எஸ்., குலிஷ் ஆகிய ஏவுகணை கப்பல்களில், கட்டளை அதிகாரியாக அவர் பணியாற்றி உள்ளார்.
மேலும், ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ்., மைசூரு மற்றும் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவில் கட்டளை அதிகாரியாக கிருஷ்ணா சுவாமிநாதன் பணிபுரிந்துள்ளார்.
கடற்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்ற உடன், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.

