மைசூரில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க 'ஸ்வீப் குழு' மின் விளக்கு விழிப்புணர்வு
மைசூரில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க 'ஸ்வீப் குழு' மின் விளக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 23, 2024 06:55 AM
மைசூரு: இந்தாண்டு லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, 'ஸ்வீப்' எனப்படும் மாவட்ட வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு குழு, தனது பணிகளை துவக்கி உள்ளது.
மைசூரு லோக்சபா தொகுதியில், 2019 தேர்தலில், 70.39 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தன. இதற்கு முன் 1989ல் 69.74 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தன.
மைசூரு மாவட்டத்தில் மொத்தம் 2,915 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 1,314 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு சராசரியை விட குறைவாக உள்ளது. இங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகளவில் நடத்த 'ஸ்வீப்' குழு முன்வந்துள்ளது.
நுாதன முறை
நகரின் முக்கிய சதுக்கங்களில் லோக்சபா தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். மின் விளக்கு அலங்காரத்தின் மூலம் 'நாட்டின் பெருமை' என்ற வாசகத்தை சித்தரிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனத்துடன், 'ஸ்வீப்' குழுவினர் பேச்சு நடத்தினர்.
நகரின் நான்கு முக்கிய சதுக்கங்களில், 'ஏப்., 26 தவறாமல் வாக்களியுங்கள்' என்ற விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றிருக்கும். வழக்கம் போல், விண்டேஜ் கார், பைக் ஊர்வலம் நடக்க உள்ளது. கூடுதலாக அனைத்து இடங்களிலும் 'செல்பி' பூத்கள் வைக்கப்பட உள்ளன. மேலும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களிலும் விழிப்புணர்வு செய்திகள் இடம் பெறுவது தொடர்பாக ஸ்வீப் குழுவினர் பேச்சு நடத்தி உள்ளனர்.
கடந்த தேர்தலை விட இம்முறை ஓட்டுப்பதிவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இளைஞர்கள், முதன் முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் போன்றோரை மையமாக வைத்து தேர்தல் பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.
தேர்தல் துாதர்கள்
மேலும், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரபலமான கிரிக்கெட் வீரர் ஜவகர் ஸ்ரீநாத், வனவிலங்கு நிபுணர்கள் கிருபாகரா - சேனானி ஆகியோரின் பெயர்களை ஸ்வீப் குழு, தலைமை தேர்தல் ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளது. ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.
கிராமப்புற வாக்காளர்களை விட, நகர்ப்புறங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மைசூரில் உள்ள நரசிம்மராஜா, கிருஷ்ணராஜா, சாமராஜா ஆகிய சட்டசபை தொகுதிகளில், கடந்த தேர்தல்களில் சாரசரியாக 59 - 60 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகின.
எனவே நகர்ப்புற வாக்காளர்களை தேர்தலில் ஓட்டு போடு வைப்பதற்காக, ஸ்வீப் குழுவினர் தயாராகி வருகின்றனர்.

