இடிந்து விழுந்த 40 ஆண்டு பாலம் உயிர் தப்பிய தமிழக லாரி ஓட்டுனர்
இடிந்து விழுந்த 40 ஆண்டு பாலம் உயிர் தப்பிய தமிழக லாரி ஓட்டுனர்
ADDED : ஆக 08, 2024 01:29 AM

உத்தர கன்னடா,
கர்நாடகாவில், 40 ஆண்டுகள் பழமையான பாலம் மூன்று துண்டுகளாக இடிந்து விழுந்தது. அந்நேரத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த, தமிழக லாரி ஆற்றில் விழுந்தது. ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் நகரையும், சதாசிவ்காடையும் இணைக்கும் பாலம், 1983ல் காளி ஆற்றின் மேல் கட்டப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 66ல் அமைந்துள்ள இப்பாலம், கர்நாடகாவில் இருந்து கோவா செல்ல முக்கியமான வழித்தடமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க, பழைய பாலத்தின் அருகில் 2018ல் புதிய பாலம் கட்டி திறக்கப்பட்டது. அதேநேரம் பழைய பாலத்திலும் போக்குவரத்து நடக்கிறது.
கர்நாடகாவில், ஒன்றரை மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 1:30 மணியளவில், சதாசிவ்காட் வழியாக, இப்பாலத்தில் தமிழக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பாலத்தை பாதி துாரம் கடந்த நிலையில், திடீரென பாலம் மூன்று பகுதியாக இடிந்து விழுந்தது.
லாரியுடன் ஆற்றில் விழுந்த ஓட்டுனர், லாரியின் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து, லாரி மீது அமர்ந்தபடி கூச்சலிட்டார்.
இதைப் பார்த்த புதிய பாலத்தில் வந்தவர்கள், உடனடியாக இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தியதுடன், போலீசாருக்கும், அப்பகுதி மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
மீனவர்களும் உடனடியாக படகில் சென்று, டிரைவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் தமிழகத்தைச் சேர்ந்த பாலமுருகன், 37, என்பது தெரியவந்தது.
கலெக்டர் லட்சுமிபிரியா, எம்.எல்.ஏ., சதீஷ் செய்ல், எஸ்.பி., நாராயண் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
முதல்வர் சித்தராமையாவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பாலங்கள், சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிர்சேதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.