ADDED : ஆக 03, 2024 07:30 PM

பாலக்காடு:கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமாக பெய்யும் நிலையில், நேற்று ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபட்டனர்.
கேரளா மாநிலத்தில், பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கரையோரங்களில் தர்ப்பணம் நடத்த, அரசு அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், புகழ்பெற்ற ஆலுவா சிவன் கோவில், திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோவில், மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ள திருனாவாய நாவா முகுந்தர் கோவில், வயநாடு அருகே உள்ள திருநெல்லி சிவன் கோவில் ஆற்றங்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
மேலும், திருச்சூர் மாவட்டத்தில், பாம்பாடி ஐவர்மடம், பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ஆற்றங்கரையோர பகுதிகள், ஆனிக்கோடு அஞ்சு மூர்த்தி கோவில், மேற்கு யாக்கரை விஸ்வேஸ்வரர் கோவில் என பல இடங்களில் அதிகாலை முதல், ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மாநிலத்தின் பல்வேறு கடற்கரை ஓரங்களிலும், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.