ADDED : மே 05, 2024 05:52 AM

ஹூப்பள்ளி: ''நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். ஹிந்து விரோத காங்கிரஸ் அரசுக்கு சரியான பாடம் -புகட்ட வேண்டும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தினார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, தார்வாட் தொகுதியில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம் செய்து வருகிறார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை, சிறுபான்மையினருக்கு ஒதுக்குவதற்கு அரசு முன்வந்துள்ளது. இதற்கு, லோக்சபா தேர்தலில் உணர்வுள்ள வாக்காளர்கள் தகுந்த பதிலளிப்பர். மாநிலத்தின், 28 தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். ஹிந்து விரோத காங்கிரஸ் அரசுக்கு சரியான பாடம் -புகட்ட வேண்டும்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நாட்டை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்ற உணர்வு வாக்காளர்களிடம் காண முடிகிறது.
பா.ஜ., - ம.ஜ.த., இரு கட்சி தொண்டர்களும் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். 7ம் தேதி நடக்கும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும் சூழல் உருவாகி உள்ளது.
மாநில அரசு, கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஹிந்து பெண்கள் மத்தியில் அச்சம் நிறைந்த சூழல் காணப்படுகிறது. காங்கிரஸ் அரசு, சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் கொள்கைகளால் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 'லவ் ஜிகாத்' வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.
நாளுக்கு நாள் கொலை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. தாய்மார்கள் கவலையில் உள்ளனர். மாநில அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது. குண்டர்களை கைது செய்ய மாநில அரசு நுாறு முறை யோசிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.