மயில் கறிடா மாப்ளே; சப்புக்கொட்டி சாப்பிட்டார்: சர்ச்சை யூடியூபருக்கு 'காப்பு'
மயில் கறிடா மாப்ளே; சப்புக்கொட்டி சாப்பிட்டார்: சர்ச்சை யூடியூபருக்கு 'காப்பு'
ADDED : ஆக 12, 2024 10:36 AM

ஹைதராபாத்: பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து, யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட நபரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
யூடியூப் நிறுவனம், வீடியோ பதிவிடுவோருக்கு கணிசமாக பணம் தருகிறது. எந்தளவுக்கு வீடியோ சர்ச்சையாகி, பலரது பார்வைக்கும் வருகிறதோ, அந்தளவுக்கு பணம் கிடைக்கிறது. போட்டி அதிகமாகி விட்டதால், யூடியூபர்கள் சிலர், கிறுக்குத்தனமான செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். இவர் யூடியூப் சேனல் ஒன்று வைத்துள்ளார். இவர், பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்துள்ளார்.
மயில் கறி
சில தினங்களுக்கு முன், பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டார். மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் அந்த வீடியோவை யூடியூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார்.
நடவடிக்கை
தேசியப் பறவையான மயிலை கொன்றதால், பிரணாய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. தற்போது பிரணாய் குமாரை போலீசார் கைது செய்தனர். பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.