/
செய்திகள்
/
இந்தியா
/
சொத்து குவிப்பு வழக்கில் சிவகுமாருக்கு தற்காலிக நிம்மதி!... சி.பி.ஐ., விசாரணையில் இருந்து தப்பினார் லோக் ஆயுக்தா விசாரிக்க ஐகோர்ட் அனுமதி
/
சொத்து குவிப்பு வழக்கில் சிவகுமாருக்கு தற்காலிக நிம்மதி!... சி.பி.ஐ., விசாரணையில் இருந்து தப்பினார் லோக் ஆயுக்தா விசாரிக்க ஐகோர்ட் அனுமதி
சொத்து குவிப்பு வழக்கில் சிவகுமாருக்கு தற்காலிக நிம்மதி!... சி.பி.ஐ., விசாரணையில் இருந்து தப்பினார் லோக் ஆயுக்தா விசாரிக்க ஐகோர்ட் அனுமதி
சொத்து குவிப்பு வழக்கில் சிவகுமாருக்கு தற்காலிக நிம்மதி!... சி.பி.ஐ., விசாரணையில் இருந்து தப்பினார் லோக் ஆயுக்தா விசாரிக்க ஐகோர்ட் அனுமதி
ADDED : ஆக 30, 2024 06:26 AM

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தாக்கல் செய்த மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதே நேரம், லோக் ஆயுக்தா விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ள நீதிமன்றம், இந்த மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவது சரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரிப்பது சரியானதாக இருக்கும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
- பசனகவுடா பாட்டீல் எத்னால்
எம்.எல்.ஏ., - பா.ஜ.,
கர்நாடகாவில், 2013 - 2018 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது, நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்த சிவகுமார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், அவரது வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்களின் வீடுகள் என, 60க்கும் மேற்பட்ட இடங்களில், 2017 ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமான வரி
சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, சிவகுமார், அவரது மனைவி உஷா, மகள் ஐஸ்வர்யா உட்பட பலரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.
அப்போது, ஹவாலா பண பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சிவகுமாரை கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். பின், ஜாமினில் வெளியே வந்தார்.
இதையடுத்து, மாநிலத்தில் அமைந்த பா.ஜ., அரசு, சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்தது. இதன்படி, சி.பி.ஐ.,யும் விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், சிவகுமார் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த அனுமதி அளித்த உத்தரவை, திரும்ப பெற்றது.
மனுக்கள் தள்ளுபடி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுபோன்று, விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும், மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள் மீது ஏற்கனவே விசாரணை நடந்து வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், நீதிபதிகள் சோமசேகர், உமேஷ் அடிகா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, சி.பி.ஐ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதே நேரம், சொத்து குவிப்பு தொடர்பாக, லோக் ஆயுக்தாவில் நடந்து வரும் விசாரணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
அதிகார வரம்பு
நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு:
மாநில அரசுக்கும், சி.பி.ஐ.,க்கும் இடையே பிரச்னை இருப்பதை வாதங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். சி.பி.ஐ., மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. டில்லி சிறப்பு போலீஸ் சட்டம் மற்றும் பண பரிமாற்றம் சட்டம் குறித்து மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கும் அதிகார வரம்பு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இங்கு விவாதிக்கப்பட்ட சட்ட விஷயங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தொடர்புடையதால், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 131ன் படி, உச்ச நீதிமன்றம் முடிவு செய்வது சரியானதாக இருக்கும்.
எனவே, இந்த மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் முடிவு செய்வது சரியாக இருக்காது என்பதால், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணலாம்.
இவ்வாறு தீர்ப்பளித்தனர்.
அடுத்த தலைவலி
இவ்வழக்கில், சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பிரசன்ன குமார், பசனகவுடா பாட்டீல் எத்னால் தரப்பில், வழக்கறிஞர் தளவாய் வெங்கடேஷ், கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஏற்கனவே வாதாடியது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம், துணை முதல்வர் சிவகுமாருக்கு தற்காலிக நிம்மதி ஏற்பட்டுள்ளது. ஆயினும், சி.பி.ஐ., பசனகவுடா பாட்டீல் எத்னால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், அடுத்த கட்ட தலைவலி ஆரம்பமாகும் வாய்ப்பு உள்ளது.
துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
நாம் நம்பியபடி, நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைத்துள்ளது. நீதியின் கீழ் பாதுகாப்பு கிடைத்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு, என்னை விட அரசுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி.
எனக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், அரசுக்கும் நன்றி. இந்த வழக்கில் எனக்கு அநீதி ஏற்பட்டிருந்தால், உச்ச நீதிமன்றத்தை நாடி இருப்பேன். அதுபோன்று, சி.பி.ஐ.,யும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.
நான் யாருக்கும் மோசம் செய்யவில்லை. நாட்டில் பல வழக்குகள் உள்ளன. அவற்றை விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. பல சொத்து குவிப்பு வழக்குகள் இருந்தாலும், என் வழக்கை மட்டுமே சி.பி.ஐ.,யிடம் எடியூரப்பா அரசு ஒப்படைத்தது.
அவர் எதற்காக சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்தார் என்று அனைவருக்கும் தெரியும். நான் மிகவும் கஷ்டப்பட்டு அரசியல் செய்கிறேன். என் உயிர் உள்ள வரை, என் நண்பர்கள், என் மீது வழக்கு தொடர்வர்.
நான் இதுவரை எதற்கும் அஞ்சவில்லை. அஞ்ச மாட்டேன். நான் ஏற்கனவே திஹார் சிறையை பார்த்தவன். லோக் ஆயுக்தா என்னிடம் விசாரணை நடத்துகிறது. சில ஆவணங்கள் கேட்டுள்ளனர். அவை சமர்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.