மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு; பாதுகாப்பு படையினர் குவிப்பு
மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு; பாதுகாப்பு படையினர் குவிப்பு
ADDED : மார் 10, 2025 01:30 AM

இம்பால்,: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், கூகி சமூகத்தினர் நடத்தும் போராட்டங்களால் பதற்றம் நீடிக்கிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 மே மாதம் கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது. இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் அமைதி திரும்பியதை அடுத்து, 22 மாதங்களுக்கு பின், பொது போக்குவரத்தான பஸ் சேவை நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.
முதற்கட்டமாக, இம்பாலில் இருந்து காங்போக்பி மாவட்டம் வழியாக சேனாபதிக்கும், பிஷ்ணுபூர் வழியாக சுராசந்த்பூருக்கும் பஸ் சேவைகள் துவங்கின. அப்போது, பஸ்கள் மீது கற்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தினர்.
ஒருசில இடங்களில் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
இந்த விவகாரம் தொடர்பாக கூகி சமூகத்தினரின் கூகி - சோ குழு வெளியிட்டுள்ள வீடியோவில், 'எங்கள் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், மெய்டி சமூகத்தினர் சுதந்திரமாக வந்து செல்ல அனுமதிக்க முடியாது.
'இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, யாரையும் எங்கள் பகுதிக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மாட்டோம். எங்கள் சமூகத்தினர் நடத்தும் போராட்டங்களை ஒடுக்கும் பாதுகாப்பு படையினரை கண்டித்து, அனைத்து பகுதிகளிலும் காலவரையறையின்றி கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளோம்' என, எச்சரித்துள்ளனர்.
கூகி சமூகத்தினரின் இந்த போராட்டத்தால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.