ADDED : ஜூலை 04, 2024 01:58 AM
புதுடில்லி:மழைக்காலத்தில் தெருநாய்கள் ஒதுங்குவதற்கான தங்கும் கூடாரங்களை அமைத்து, விலங்கு ஆர்வலர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
வெயிலால் அனைவரும் துவண்டு அல்லல்பட்டுக் கொண்டிருந்த வேளையில், 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி, நகரவாசிகள் அனைவரையும் மழை திக்குமுக்காடச் செய்துவிட்டது. இதன் பாதிப்பு சில நாட்கள் நீடித்து வந்தது.
பருவமழைக் காலம் துவங்கிவிட்டது. மழையால் ஏற்படும் பாதிப்புகள் நம் கண் முன்னே வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்திவிட்டது, கடந்த வாரம் பெய்த கனமழை.
இது ஒருபுறம் இருக்க, வாயில்லா ஜீவன்கள் குறித்த கவலையை விலங்கு ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தெருநாய்களுக்காக தங்கும் கூடாரங்களை அமைத்து வருகின்றனர்.
குருகிராமைச் சேர்ந்த ஜிக்யாசா திங்ரா என்ற மாணவர், ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தங்கும் கூடாரங்களை உருவாக்கியுள்ளார். அவற்றை, நகரின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்களுக்காக வைத்துள்ளார்.
பழைய பொருட்கள் கடைகளில் இருந்து தேவையில்லை என்று வீசியெறிந்த மரத்துண்டுகள், பொருட்களை வாங்கி வந்து, அவற்றைக் கொண்டு தெருநாய்களுக்கான கூடாரங்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த வழியை மேலும் பலர் பின்பற்றியுள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.