ADDED : மே 13, 2024 02:49 AM
ஒட்டாவா : கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், நம் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு இந்தியரை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நம் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடாவின் குற்றச்சாட்டை மறுத்தது. இந்த விவகாரத்தால், கனடா -- இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் என்ற பகுதியில் வசிக்கும் கரண் பிரார், 22, கமல்ப்ரீத் சிங், 22, கரன்ப்ரீத் சிங், 28, ஆகிய மூன்று இந்தியர்களை, கனடா போலீசார் கடந்த 3ல் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு இந்தியரை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர்.
அங்குள்ள பிராம்ப்டன், சர்ரே மற்றும் அபோட்ஸ்போர்ட் பகுதிகளில் வசித்த அமர்தீப் சிங், 22, என்பவர், நிஜ்ஜார் கொலையில் பங்கு வகித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துஉள்ளனர்.
அவர் மீது முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் அமர்தீப் சிங் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.