ADDED : பிப் 22, 2025 05:23 AM
'வெல்பேர்' நிதி முறைகேடு?
பெமல் பகுதிகளை துாய்மையாக வைத்துக்கொண்டிருந்த நிர்வாகம், அதனை கைவிட்டுள்ளது. முன்பு பிளாஸ்டிக் குப்பைகளே இல்லாமல் இருந்தது. தற்போது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளன. பிளாஸ்டிக்கிற்கு விலக்கு அளித்தனரோ என எண்ணக வேண்டியுள்ளது.
பெமல் நிர்வாக குடியிருப்பு பகுதிகளின் வீடுகள் பராமரிப்பு இல்லாததால் எப்போது இடிந்து விழுமோ, என்ற பீதி உள்ளது. இதனால் நிறுவன வீடுகள் வேண்டாமென சொல்றாங்க.
இந்த கம்பெனியோட எஸ்டேட் துறைக்கு வேலையே இல்லாமல் போயிருக்கு. இருந்தாலும் வெல்பேர் நிதி கணக்கில முறைகேடு நடத்தி வருவதாக தொழிலாளர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரிய கண்டம்
பால் பண்ணை கூட்டுறவு சங்கத்தில் மெகா ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. வாகனங்களுக்கு டீசல் போட்டதில் ஊழல் வெளியில் வந்திருக்குது. மாலுாரின் கை கட்சி அசெம்பிளிக்காரர் பால் பண்ணை தலைவராவார். அவரின் ஊழலை வெளியிடுபவர் ப.பேட்டை கைக்கார அசெம்பிளிக்காரர்.
இந்த மோதல் விவகாரம் கைகாரர் துவங்கி வச்சதை, பூக்காரர்கள் அசெம்பிளியில் வெளியிட ஆதாரங்களை திரட்டி வர்றாங்க. இதன்படி அமலாக்க துறை, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா விசாரிக்கணும்னு கோரப்போறாங்க. மாலுார் அசெம்பிளிகாரருக்கு பெரிய கண்டம் காத்திருக்குது.
கை கோளாறு
கோல்டு சிட்டியில் தொழிற் பூங்கா ஏற்படுத்துவது பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டம். இந்த திட்டம் அமல்படுத்த ப.பேட்டை அசெம்பிளிக்காரர் தயவு தேவைப்படுகிறதாம். ஒத்துப்போனால் பங்கு தகராறு ஏற்படாது; வேலைகளுக்கு தடங்கலும் வராது.
'குடா' என்ற அபிவிருத்தி குழும சேர்மன் ப.பேட்டைக்காரர் அனுமதி மிக அவசியம் தேவை. அதனால, இதுக்கு பாதிப்பே வராதபடி 'அட்ஜெஸ்ட்மென்ட்' ஆகிட்டதா சொல்றாங்க.
கோல்டு சிட்டி தொகுதியின் அசெம்பிளிக்காரரை வழிநடத்தும் மாவட்ட கூட்டுறவு வங்கி சேர்மனை ப.பேட்டை அசெம்பிளிக்காரர் புகழ்ந்து வருவதால், சீனிவாசப்பூரின் முன்னாள் அமைச்சரான சட்ட நிபுணர், மிகவும் அதிருப்தியில் இருக்காராம்.
தன்னை அசெம்பிளி தேர்தலில் தோற்கடிக்க செய்தவரே, இந்த மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் தான். அவரை போய் ப.பேட்டை அசெம்பிளிக்காரர் எப்படி உயர்த்தி பேசலாம்னு கோபத்தில் இருக்கிறாங்க. எனவே ப.பேட்டைக்காரருக்கு ஆப்பு வைக்கும் வேலையை செய்ய துவங்கி இருக்காங்க. கோலார் மாவட்ட கை கட்சி அசெம்பிளிக்காரர்கள் மத்தியில் கோளாறு ஏற்பட்டாச்சு.
தகுதி எப்போது?
கோல்டு சிட்டி தனித் தாலுகா தகுதிக்கு வந்ததாக அலப்பறை செஞ்சாலும் அரசு மருத்துவமனை இன்னும் தாலுகா தகுதியை பெறவில்லையாம். ப.பேட்டை தாலுகாவுக்கு வரும் நிதியை தான், கோல்டு சிட்டிக்கு பிரித்து தராங்களாம். ஒரு காலத்தில கோல்டு சிட்டி மாவட்டத்துக்குரிய சிறப்பு தகுதியை பெற்றிருந்தது. அதனால் தான் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், சிறைச்சாலை, போலீஸ் எஸ்.பி., ஆபீஸ், ஆர்.டி.ஓ., அலுவலகம், மத்திய அரசின் இரண்டு பொதுத் துறை நிறுவனங்கள் என பலவும் இருந்தது.
ஆனால், தாலுகா நிர்வாகத்துக்குரிய தகுதியில் மருத்துவமனை இல்ல. சமூக நலத்துறை அலுவலகம் உட்பட இன்னும் சில துறைகள் வந்தபாடில்லை. இதற்கு பொறுப்பானவங்க எப்போது அரசிடம் கேட்டு பெறுவாங்களோ?