வேலி இல்லா நிலம்!
முனிசி.,க்கு சொந்தமான காலி இடங்களுக்கு வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றரை ஆண்டுகள் முடிந்து போனது. ஆனால் ஒரு இடத்தில் கூட வேலி அமைக்கப்படவில்லை.
இடுகாட்டு நிலத்தை கூட விட்டு வைக்கல. முக்கிய பிரமுகர்களின் வீடுகள் அருகே இருந்த மைதானங்களும் பட்டா போட்டு விழுங்கிட்டதா சொல்றாங்க. இருக்கும் இடங்களை காப்பாத்திக்குவாங்களா அல்லது கண்களை மூடிக் கொள்வாங்களா.
முனிசி., நேதாஜி பூங்கா பின்புறம் உள்ள நிலம் முனிசி., வசம் வந்தும் கூட வேலி போடப்படவில்லை. போலி பட்டா எத்தனை பேர் கைவசம் இருக்குதோ.
அட்வான்ஸ் புக்கிங்!
கோல்டு சிட்டியில புதுசா தொழிற்பேட்டை வரப்போகுதுன்னு சில ஆண்டா சொல்றாங்க. அதுக்காக இடம் தேர்வும் செய்திட்டாங்க. வருவாய்த் துறை வசம் இருந்த நிலத்தை தொழில் துறைக்கு வழங்கிட்டாங்க.
தொழிற்சாலைகள் அமைக்க டெண்டர் கோர தயார் நிலையில் இருக்காங்க. பெரிய தேர்தல் முடிவுக்கு பின், அதன் வேலைகளும் நடக்க போகுது.
நுாற்றுக்கும் அதிகமான, பலவிதமான பேக்டரிகள் வரப்போகுதாம். இப்பவே 'அட்வான்ஸ் புக்கிங்' செய்ய உள் வேலைகளை துவக்கி இருப்பதாக தெரியுது.
பல மல்டி மில்லினியர்கள், கேபிடல் சிட்டியில் 'டிஸ்கஷன்' நடத்தி வர்ராங்களாம். பேக்டரியும், முக்கிய புள்ளிகளுக்கு கோடியில் கமிஷனும் வந்து கொட்டப்போகுதாம். ஏராளமானோருக்கு வேலை கிடைக்க போகுது. நேரம் நல்ல நேரம் தான்.
தெருவெல்லாம் லொள் லொள்!
பெமல் அருகில் தைல மரத்தோப்பில் பலவிதமான மான்கள் துள்ளி குதித்து வசித்து வருகின்றன. இவைகளுக்கு உரிய பாதுகாப்பே இல்லை. பல மான்கள், தெருநாய்களின் வேட்டைக்கு பலியாகிறது. இதனை தடுப்பது யார் என்று தெரியவில்லை.
தெருநாய்கள் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த, முனிசி.,யில் 2023 ம் ஆண்டு, பட்ஜெட்டில் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினாங்க. அந்த நிதி என்னவானது. இதுக்காக டெண்டர் கூட அழைக்கவில்லை.
தெரு நாய்களால் பாதிப்பில் மான்கள் மட்டுமல்ல, 35 வார்டுகளும் பாதித்துள்ளது. முதியோர், சிறுவர்கள் தினமும் பயந்து அலறுகின்றனர். நிதி ஒதுக்கியும் எந்த பிரயோஜனமும் இல்லை.
முனிசி., கவுன்சில் கூட்டம் நடந்து ஓராண்டை கடந்து விட்டது. மக்கள் பிரச்னைகளை, யார் தான் தீர்ப்பாங்களோ தெரியவில்லை.

