'ஆட்டை' போட துடிப்பு!
கோல்டு சிட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுமானப் பணிகள் 90 சதவீதமும், அரசின் இந்திரா -உணவக கட்டடப் பணியும் முழுமையாக முடிந்திருக்கு. இவைகளின் திறப்பு விழா தாமதம் ஆகி வருகிறது. எல்லாமே, பெரிய தேர்தலின் முடிவுக்கு காத்திருக்காங்களாம்.
சுரங்க நிர்வாகத்துக்கு சொந்தமான பழைய ஆர்.டி.ஓ., அலுவலக கட்டடத்தை காலி செய்த பின், அதனை ஆட்டைய போட கட்சிகளின் தலைகள் இப்பவே தயாராகி வராங்க. பொது நோக்கத்தில், இதனை அரசின் பொது நுாலகமாக ஆக்குவதற்கும், கோல்டு மைன்சின் வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் அமைக்கவும் அரசுக்கு மனுக்கள் போயிருக்கு. இதில் யார் தலையிட்டு என்ன செய்ய போறாங்களோ?
அக்கறையற்ற நகராட்சி!
கர்நாடக தலைநகரில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள கோல்டு நகர், டவுன் சபையாக இருந்தது. இதை நகராட்சியாகவும், தாலுகாவாகவும் தரம் உயர்த்தினாங்க. ஆனாலும் கூட தங்கவயல் நகரின் நுழைவு வாயில் ஏற்படுத்தவில்லை. தொகுதியின் எல்லை துவக்கம், 30 கி.மீட்டருக்கு அப்பால் உள்ளது. ஆனால் நகராட்சி எல்லைகள் 10 கி.மீ., கூட தாண்டாது.
நகராட்சி எல்லை துவக்கமாக பெமல் நகர் ஆலமரம், ஸ்கூல் ஆப் மைன்ஸ், மாரிகுப்பம் அலிக்கடை, ராஜர்ஸ்கேம்ப், உரிகம் பேட்டை, சொர்ண குப்பம் இடங்களில் நுழைவாயில் ஏற்படுத்த வேண்டும். நகர அடையாளத்தை, இந்த நுழைவாயில் தான் வெளிப்படுத்தும்.
முனிசி., யில் இது பற்றி 10 வருஷத்துக்கு முன்னாடியே விவாதமும் நடந்தது. ஆனால் முனிசி.,யில் நிதி நெருக்கடியா, அக்கறை இல்லையான்னு தெரியல. தேசப் பிதா சிலை நிறுவிய கல்வெட்டை கூட அகற்றி வெச்சிருக்காங்க. மறுபடியும் பதிக்கவே இல்லை. 'கேர்லெஸ்' முனிசி.,யாக இருக்குது.
அவதிப்படும் மாணவர்கள்!
'மெயின்' பள்ளியில் மாணவ - மாணவியர் விளையாட மைதானம் இல்லாததால், 'லவ்வர்ஸ்' பூங்காவுக்கு அனுப்பி விளையாட வைத்து வேடிக்கை காட்டுறாங்களாம். இதை சகித்துக் கொண்டாலும், பள்ளியில் 10 கழிப்பறைகள் கூட இல்லையென தெரிய வந்துள்ளது. இயற்கை உபாதையால் யாரும் சொல்ல வெட்கப்படுறாங்களாம்.
பெற்றோர் கொண்டு வரும் மதிய உணவை கூட சாப்பிட இடம் வசதி இல்லாமல் நடை பாதைகள், பிறரின் கட்டடங்களின் தாழ்வாரம், பூங்காக்கள் என பல இடங்களில் சாப்பிட வைக்கிறாங்க. இவை அனைத்தும் அருகிலுள்ள வட்டார கல்வி அதிகாரி ஆபீசுக்கும் தெரியுமாம். மாவட்ட, மாநில கல்வி அதிகாரிகள் கவனிக்க வேணும்னு புகார் பட்டியல் நீளுகிறதாம்.