ADDED : ஜூன் 24, 2024 04:50 AM
பாவம் ஒரு பக்கம்-
வீட்டுக்கு வந்த விருந்தாளி செய்த தப்புக்கு, வீட்டு உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்க சொல்வதை கேட்டு உள்ளீர்களா. அது போல, தப்பு செய்தவரை 'டச்' பண்ண தைரியம் இல்லாமல், சட்டம் பேசுற சங்கத்தில் பல பதவிகளில் இருந்தவரை, அதிலும் சீனியரின் மகனை, 'சாரி' சொல்ல வெச்சிட்டாங்களாம்.
இதை பாவம் என்பதா, சாபம் என்பதா அல்லது அடுத்த தேர்தலுக்கு பதுங்கி இருந்து பாயும் திட்டமான்னு தெரியல.
இவருக்காக சில மகளிரும் கரிசனம் காட்டுறாங்களாம். தேர்தல் வந்தால், யார் யார் எந்தெந்த அணியில் நிற்பர் என்பதில் குடைச்சல் ஏற்பட்டிருக்குது.
பிரச்னை வந்தால் எதிலும் ஒட்டாமல் ஒதுங்குவோர் யார் யார் என தெரிந்து போச்சாம். சீனியர்கள் அட்வைஸ் பெற்று, தேர்தல் நாள் குறிக்க போறாங்களாம்.
பில்டப் பயன் தருமா?
முன்னாள் மூத்த அதிகாரியை, பெரிய அரசியல்வாதி போல மாற்றி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக பவனி கொண்டு வந்தாங்க.
நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும். எவ்வளவு தொகை வரும், என்பதை சொல்ல வருகிறார் பராக்... பராக் என்று சொன்னாங்க.
ஆனால் வக்கீலாக மாறிய, அந்த முன்னாள் அதிகாரி, வாத விவாத தகவல்கள் பற்றிய விபரங்களை கூறினார். நீதிமன்ற தீர்ப்பை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதே இதன் சுருக்கமான தகவல்.
என்ன தான் 'பில்டப்' கொடுத்தாலும் அரசுக்கு கொண்டு செல்ல ஆளுங்கட்சி தான் தீர்மானிக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்க வேண்டாமா.
சுரங்க பிரச்னையில் வழங்க பட்ட தீர்ப்பை இதுவரை அமல் படுத்தாமல் இருக்கிற விபரங்களை தொழிலாளர்கள் மறக்கலயே.
வசூலுக்கு கிடுக்கி
கை கட்சி அசெம்பிளி மேடத்தின் கன்ட்ரோலில் உள்ள முனிசி.,க்கு எதிராக புதிய செங்கோட்டைக்காரர் பேச துவங்கி இருக்காரு.
கோல்டு தொகுதி வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த போறாராம். 1,000 வீடுகளுக்கு பட்டா பதிவு செய்யாமல் கிடப்பில் துாங்கும் போது, கை கட்சி கவுன்சிலர் ஒருவருக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது எப்படி.
இந்த வீடுகள் பதிவுக்கு ஆயிரக்கணக்கில் பறிக்க உள் வேலை நடக்குதாம். இந்த கதை புல்லுக்கட்டு புதிய செங்கோட்டைக்காரருக்கு போயிருக்கு.
கை கட்சியின் வசூல் வேட்டை பற்றி எரிய போகுது. புல்லுக்கட்டின் ஒரு அணி அரசியல் விளையாட துவங்கிட்டாங்க.
பின் வாசல் வருமானம்
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம், லோக்கல் கல்வி ஆபிசருக்கு வழங்கி இருக்காங்க. பின் வாசல் வழியாக வரும் வருமானத்தால் அவரு, தலைகால் புரியாமல் இருக்காராம்.
ஏற்கனவே தனியார் பள்ளி முறைகேடுகளை மறைக்க, பண மழை கொட்டுதாம். பணம் வழங்காத தனியார் பள்ளிக்கான மிரட்டல் ஓவராக இருக்குதாம்.
இவர் மீது ஆக் ஷன் எடுக்காதபடி, பெரிய ஆபிசரின் கண்ணை கட்டுவதில் கில்லாடியாம். அப்படி இருந்தும், ஒரு மாவட்ட ஆபிசரு வந்தாரு. அவரையும் பண மழையில் நனைத்து, ராஜ உபச்சாரம செஞ்சாங்களாம்.
ஒழுக்கம் கற்றுத்தரும் கல்வித்துறையே ஒழுங்கீனமாக மாறி போச்சேன்னு கல்வியாளர்கள் வருந்துறாங்க.