ADDED : ஜூலை 06, 2024 06:17 AM
துாங்கும் சர்ட்டிபிகேட்!
கோல்டு நகர் வளர்ச்சி பணிகள், கோலார் தொகுதி செங்கோட்டைக்காரரை நம்பியே உள்ளது. தேர்தல் நேரத்தில், மைனிங் பகுதியில் இவர் நடமாடவில்லை. ஜெயித்த பிறகாவது வந்து ஜனங்களோட வாழ்வாதாரம் பற்றி தெரிந்திருக்கலாமே.
எலக் ஷன் நெருங்கிய வேளையில், மைனிங் வீடுகளில் குடியிருப்போருக்கே உரிமை எனப்படும், 'பொசஷன் சர்ட்டிபிகேட்' கொடுக்க, ம.மந்திரியை வரவச்சாங்க. 1,800 பேருக்கு தான் கொடுத்தாங்க. மத்தவங்களுக்கு இன்னும் வழங்கல. ஆபீசில் கோப்புகள் துாங்குது.
வாங்கியவங்க, இந்த சர்ட்டிபிகேட் பத்திர பதிவு, எங்கு செய்ய வேணும். இல்லாவிடில், வீட்டு பூஜை அறையில் வைத்து சாம்பிராணி போட்டுக் கொள்ளணுமான்னு கேட்குறாங்க.
வெரிகுட் வாங்குவாரா?
மைசூரு, பெங்களூரு பெருநகரங்களில் இருந்து சென்னை, கோவை, திருப்பதி, கொச்சுவேலி, தர்பங்கா, ஹவுரா, டில்லி செல்லும் ரயில்கள் பங்கார்பேட்டை, குப்பம் வழியாக காமசமுத்ராவை கடந்து தான் செல்கிறது. ரயில்கள் வந்து செல்லும் போது, இங்குள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.
இங்கு ஒரு மேம்பாலம் அமைக்க வேணும்னு பல நுாறு முறை சொன்னது தான் மிச்சம். மேம்பாலம் எழும்பியபாடில்ல. புதுசா செங்கோட்டைக்கு போயிருக்கிறவராவது, நடவடிக்கை எடுப்பாரா. அவரும் வந்தார்; இவரும் வந்தாருன்னு எதையுமே கண்டுக்காம போயிட்டாருன்னு, ஜனங்க பேசாதபடி பார்த்துக் கொண்டால், 'வெரி குட்' வாங்கலாம்.
இணையுமா இரு துருவங்கள்?
தென்பெண்ணை, பாலாறு, பேத்தமங்களாவில் நிரம்பி ஆந்திரா வழியாக தமிழகத்தின் வாணியம்பாடி, ஆம்பூர் வழியா ஓடுது. இதனை தடுக்க ஆந்திரா குப்பம்காரங்க, தடுப்பணை கட்ட பிளான் போட்டிருக்காங்க. அதேபோல, கிருஷ்ணா நதி நீர், கோல்டு சிட்டி தொகுதியை கடந்து தான், குப்பத்துக்கு கொண்டு போறாங்க. அதுக்காக கால்வாயும் ரெடியாகுது.
இதுல, குடிநீருக்காக கோல்டு தொகுதிக்கு ஒரு டி.எம்.சி., தண்ணீர் வாங்கணும்னு செங்கோட்டைக்காரர், அசெம்பிளிகாரர் இணைந்து குரல் கொடுக்கணுமுன்னு கோல்டு சிட்டியே எதிர்ப்பாக்குது. நல்ல திட்டத்துக்கு இவங்க 'ஈகோ' பார்க்காம, ஒரே 'டிராக்' கில் எப்போது பயணம் செய்வாங்க.
'ஜன ஸ்பந்தனா'வில் இருவரும் பங்கேற்றிருந்தால், மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைச்சிருக்குமேன்னு கோல்டு தொகுதிகாரங்க கருதுறாங்க.
இது ஒரு கனா காலம்!
தங்கச் சுரங்கத்தை சுற்றுலா தலமாக மாற்றுவதாக, மந்திரியாக இருந்த பல்லாரி சுரங்க அதிபரு சொன்னாரு. பூமிக்கு அடியில் புது உலகம் உருவாக்கி, உழைப்புக்கு கவுரவம் தரும் செயலாக இருக்குமென சிந்திச்சாரு.
கோல்டு மைன்சுக்குள் நட்சத்திர ஹோட்டல் ஏற்படுத்தலாம். ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேல் பாதாளம் அழைத்துச்செல்லும் 'மெகா லிப்ட்' கொண்டு வரலாம். ஆனா எதுவுமே நடக்கல. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. சென்ட்ரல் கவர்மென்ட் நினைச்சா நடக்கும். சர்வதேச புகழை மீண்டும் எட்ட முடியும்.
தொழிலாளர் இறுதி நிலுவைத் தொகையான, 52 கோடி ரூபாயையே வாங்கி தர யாரும் முன்வந்த பாடில்லை. இப்படி இருக்கும் போது, சுற்றுலா தலத்தை எப்படி உருவாக்குவாங்க. இது ஒரு கனா காலமாக நெனைக்க வேண்டியது தான்.