ADDED : செப் 10, 2024 06:55 AM
கோர்ட் செலவு யாருடையது?
கோல்டு மைன்ஸ் தொழிலாளர்களுக்கு, சேர வேண்டிய எல்லா தொகையையும் கொடுத்து விட்டதாக, நிர்வாகத்தினர் கோர்ட்டில் மீண்டும் மீண்டும் சொல்லி வர்றாங்க. ஆனால், நிலுவைத் தொகை 52 கோடி ரூபாய் வழங்க வேண்டியது பற்றி, தாங்கள் தெரிவிக்கவில்லையெனவும் தெரிவித்து வராங்க.
அப்படியானால் 50 சதவீத நிலுவைத் தொகை உள்ளதாக சொன்னது யாரு. இது ஒரு கட்டுக்கதையா. மைன்சை எங்களிடம் ஒப்படையுங்கள்; நாங்கள், வெளிநாட்டு கம்பெனியோட சேர்ந்து நடத்தப்போறோம் என, தொடர்ந்து முயற்சி செய்து வந்தவங்களின் தகவலாக உள்ளதென விபரம் அறிஞ்சவங்க சொல்றாங்க.
ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில், நிறுவனம் தரப்பில் மேல் முறையீடு செய்ததற்கு பிறகு, அதனை எதிர்கொள்ள, தொழிலாளர் தரப்பில் மீண்டும் முயற்சி செய்ய போறாங்களாம். இதற்கு ஆகும் கோர்ட் செலவை சரிக்கட்டுவது யாரு?
விநாயகர் பேனரிலும் அரசியல்!
சிட்டிக்குள்ளே பிள்ளையார் பண்டிகை ஜோராக நடந்திருக்கு. ஒரு அரசியல்வாதி, தனது, போட்டோ இடம் பெற செய்த டிஜிட்டல் பேனரை வைத்தால், 10 ஆயிரம் ரூபாய் 'டொனேஷன்' வாரி வழங்கி இருக்காரு.
இதனால் 25 யூத் அமைப்பினர், நகரில் பக்தி விழாவை கலக்கிட்டாங்க. ஆர்வ கோளாறால் முனிசி.,யில் பெர்மிஷன் வாங்க தவறியதால் பல பேனர்கள் அகற்றப்பட்டன. அரசியல் உள் நோக்கத்தில் செய்திருப்பதாக, இளைஞர்கள் மத்தியில் கோபம் பொங்கி உள்ளது.
ஆசிரியர் விருதில் 'பாலிட்டிக்ஸ்!'
ஆசிரியர் தினவிழாவை கோலாகலமாக கோல்டன் சிட்டியில் கொண்டாடினது பெருமை தான். ஆனால் அவங்க பாடம் சொல்லி தரும் பள்ளி வகுப்பு அறைகளின் கட்டட சுவர்கள் பழுதடைந்த நிலையில் இருக்குது.
ஆசிரியர்களின் பெருமையை பற்றி மேடையில் பேசுறவங்க, வகுப்பறை கட்டடங்கள் பேரிலும் அக்கறை செலுத்தலாமேன்னு ஆசிரியர்கள் கேட்கிறாங்க. சிறந்த ஆசிரியர்கள் விருது வழங்கும் தேர்விலும் பாலிடிக்ஸ் இருக்குதாமே. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிகளவு தேர்ச்சியும், ரேங்க் அளவிலும் கணக்கிட்டு விருது வழங்காமல், வயதில் சீனியர் என்ற தகுதிக்கு விருது வழங்குவதை ஏற்க முடியுமான்னு ஒருத்தருக்கொருத்தர் கேட்கிறாங்க.
மீண்டும் வண்ண உணவு!
பஞ்சு மிட்டாய் கலர் கலந்தால், நஞ்சு மிட்டாய் ஆகுதென அதனை தடுத்திட்டாங்க. கபாப், கோபி மஞ்சூரியன், பலவித மிட்டாய் வகைகள் வண்ண மயமாக்கலுக்கும் ஆப்பு வெச்சாங்க. இந்த கட்டுப்பாடு ஓரிரு நாளோடு முடிந்து போனது. பழையபடி எல்லாமே வண்ணக் கலவையில் தான் விற்பனையில் இருக்குது.
கலர் கலக்கலாமென புதுசா எப்போ உத்தரவு போட்டாங்கன்னு தெரியலையே. முனிசி., ஆபீசர்கள் தடை செய்வாங்க; பின்னர் பரவாயில்லை என்று விட்டுடுவாங்களோ.
பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்வீட்கள் வண்ண மயமாக தயாரித்ததை, பறிமுதல் செய்து, இழுத்து மூடி அந்த வியாபாரத்தை பெரிய குற்றமாக வெளிப்படுத்தினாங்களே. அந்த உத்தரவு என்னானது?

