மில்லினியர்கள் பார்வை!
பெமல் கம்பெனிக்காரங்க பயன்படுத்தாமல் வைத்திருந்த 976 ஏக்கர் காலி நிலத்தை, ம.அரசிடம் ஒப்படைத்தாங்க. அதை மா. அரசு திரும்ப பெற்றது. அந்த நிலத்தில் தொழிற் பேட்டை வரப்போகுது. பன்னாட்டு தொழிலதிபர்கள் களம் இறங்க போறாங்க.
மைனிங் தொழிலை மூடிய போது, அதன் ஒர்க் ஷாப்கள், கிரஷர் ஹவுஸ் ஆகியவைகளை வீணாக்காமல், இதே பெமல் தொழிற்சாலை கேட்டுக் கொண்டதால் அவர்களிடம் ஒப்படைச்சாங்க. இந்த மைனிங் ஒர்க் ஷாப் களை பெமல் வாபஸ் தரப் போறாங்களாம்.
இதை ஆக்கிரமிக்க சில திமிங்கிலங்கள் செங்கோட்டை வரை வட்டமிட்டு வராங்களாம். மூடிக் கிடக்கிற மைனிங் மருத்துவமனையை கூட பல பேர் சொந்தம் கொள்ள, 'டாப் லெவல்' முயற்சிகள் நடந்தன. ஒரு கல்வி நிறுவனம் பல 'எல்' களை வீண் விரயம் ஆக்கியும் பிரயோஜனம் ஆகாமல் போனது.
அதை சும்மாவே மூடி வெச்சிருக்காங்க. இதில், மருத்துவக் கல்லுாரி ஆரம்பிக்க எல்லா தகுதியும் இருப்பதால் மல்டி மில்லினியர்களான பன்னாட்டு கம்பெனியினர் பார்வை இதன் மீது விழுந்துள்ளது.
வரி வசூலுக்கு ஆலோசனை!
தங்கம் உற்பத்தி செய்த மைனிங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் நன்கொடையில் உருவான திருமண மண்டபத்தை ஒரு தனியார் அமைப்பு கையகப்படுத்தி, வாடகைக்கு விட்டிருக்காங்க. இதனால் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வந்தபடி உள்ளது. 24 வருஷமா பல கோடியில் வாடகை வருவதை ஒரு கும்பல் தின்னுக்கிட்டிருக்காங்க.
வர்த்தக வரியோ, நில வரியோ இதுவரையில் நகராட்சியிலோ, மைனிங் நிறுவனத்துக்கோ செலுத்தியதாக கணக்கு எதுவும் தெரியல. வர்த்தக வரி வசூலுக்கு, நகராட்சி எந்த ஆக் ஷனும் எடுக்கல. மைனிங் பகுதியின் சொத்து வரியை செலுத்தாமல் கோடியில் நிலுவை இருக்குதாம். அதனால் வரி வசூலிக்க கலெக்டர் வரை டிஸ்கஷன் நடந்து வருகிறது.
ஓய்வில் புல்லுக்கட்டு!
நாட்டின் பெரிய தேர்தலின் போது பூக்காரங்க, கோலாரை புல்லுக்கட்டு கட்சிக்கு விட்டுக் கொடுத்தாங்க. இந்த கோலாரில் எட்டு அசெம்பிளி தொகுதியிலும் பூ வாசமே இல்லாததால் இந்த தொகுதியை, 'டேக் இட் ஈஸி' என்றாங்க. புல்லுக் கட்டு பெண் கட்சியின் கோல்டு சிட்டிக்காரர்களை ஒத்தை பைசாவுக்கும் மதிக்காமல் ஒதுக்கி வெச்சாங்க.
பூக்காரர்களுடன் சேர்ந்து செயல்படணும்னு அலட்சியம் செய்திட்டாங்களாம். ஒட்டு உறவே இல்லாத நீலக் கொடி காரருக்கு கூட 50 'எல்' வீடு தேடி போனதாம். அதனால், புல்லுக்கட்டுக் காரங்க கோல்டன் சிட்டியில் இருக்கும் இடம் தெரியாமல் ரெஸ்ட் எடுத்துட்டாங்க.
இதன் முடிவு ஜூன் 4ல் தெரிய வரும்போது கோல்டு சிட்டியில் தனியாக புல்லுக்கட்டு வேட்பாளருக்கு என்ன கிடைத்ததென அவரே அறிவார் என்கிறாங்க.

