ADDED : ஜூலை 02, 2024 06:38 AM
யாருக்கு சேர்மன் நாற்காலி?
ப.பேட்டை, மற்றும் கோல்டு சிட்டி, இந்த இரண்டு ச.தொகுதிகளுக்கு உட்பட்டது தான் கே.ஜி., வளர்ச்சி குழுமம். இதன் சேர்மன் பதவி காலியாகவே இருக்குது. முதல் கட்டமாக கோல்டு சிட்டிக்கு வாய்ப்பு கேட்டு, ப.பேட்டை அசெம்பிளிகாரரை கேட்டிருக்காங்க. அதன்படி, ஒப்புக்கொள்ளலாமென தெரியுது.
ஆனாலும் கோல்டு சிட்டியில் இந்த பதவிக்கு எதிர்பார்ப்போர் பட்டியல் பெருசாகவே நீளுது. அசெம்பிளி மேடம் சிபாரிசு தான் இதற்கு முக்கிய தேவையாக இருக்குது.
இதில் நம்பர் -1 இடத்தில் அனுபவம் மிக்க மூத்த உறுப்பினரான மண்டிக்காரர் இருந்து வரார். அவரை தொடர்ந்து, மேடமின் விசுவாசி அட்ரஸாக தொடர்பவர், வயது முதிர்ந்து ஆலோசகராக இருப்பவர், ஏற்கனவே அந்த பதவியில் இருந்தவர், என பலர் இருக்காங்க. இது சிட்டி பக்கம் உள்ள லிஸ்ட், அடுத்து, கிராம பகுதியில் ஒரு அரை டஜன் இருக்காங்க.
யாருக்கு தான் நியாயமாக வாய்ப்பு கிடைக்கப் போகுதோ.
கவுரவ சம்பளம் கிடைக்குமா?
கோல்டன் முனிசி.,யில் கவுன்சிலர்களாக இருக்கிறவங்களுக்கு அரசு தரும் கவுரவ சம்பளம் 2023 முதல் ஏப்ரல் முதல் இன்று வரை வழங்கவே இல்லை. தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு எலெக் ஷன் நடத்தாததால், மாதாந்திர கூட்டமும், 13 மாதங்களாக நடத்தவும் இல்லை.
கவுன்சிலர்கள் பதவிக் காலம் 60 மாதம். இதில் முதல் கட்ட 30 மாதங்களின் கூட்டம் நடந்தது. அடுத்த 30 மாதங்களுக்குரிய கால கட்டத்தில் கூட்டமே இல்லாமல் 14 மாதங்கள் கடந்தும் போச்சு. மீதமுள்ள பதவிக்காலம் இவர்களுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கா அல்லது 18 மாதங்களுக்கா என்ற சர்ச்சையும் பலரை பிதற்ற வைத்துள்ளது.
கூட்டமே நடத்தாமல் இருந்த காலத்திற்கும் சேர்த்து நிலுவைத் தொகை கிடைச்சிடுமா. அல்லது பதவிக் காலத்தை நீடிக்க சட்டம் இடம் தருமாங்கிற கேள்வி எழுந்திருக்கு.
மைன்ஸ் நிலம் மாபியா வசம்!
ரா.பேட்டையில் பல கோடி பெறுமானமுள்ள மைன்ஸ் பால் டெய்ரி நிலம், மைன்ஸ் சேப்டிக்கு சொந்தமான நிலத்தை சுருட்ட மகா தலைவர்கள் சிலர் முயற்சி செய்தாங்க. அதனை ஆக்கிரமிக்க முடியாமல் கைவிட்டுட்டாங்க. ஆனாலும் மைன்ஸ் காரங்க 'இது எங்கள் சொத்து' என பலகை வைக்கல.
மைன்ஸ் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் கிராம பஞ்சாயத்து, மற்றும் முனிசி.,யில் பட்டா பதிவு செய்து இருக்காங்க. ரா.பேட்டை மைன்ஸ் நிலம் முழுசா சர்வே செய்தால் உண்மை அம்பலமாகி விடும். இ.டி., பிளாக், எம்.எல்., பிளாக் சட்டப்பிதா நகரென பட்டா இருக்குதாம். அதேபோல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் பக்கத்திலும் சுரங்க நிலம் மாயமா போயிருக்கு. ஆ.பேட்டையில் மூடப்பட்ட சுரங்க இடம் எப்படி முனிசி., நிலம் ஆனதோ. கோல்டு மைன்ஸ் நிலம் கடிவாளம் இல்லாமல் மாபியா வசமாக மாறி வருது.
யாருக்கு சொந்தம்?
செக்மேடு திடல் பூங்கா ஆக்குவதாக 25 ஆண்டுகளுக்கு முன்பு முனிசி.,யில் தீர்மானம் போட்டாங்க. ஆனால் பூங்கா ஏற்படுத்தல. இந்த இடம் மட்டுமே காலியாக கிடக்குது. இது தனியாருக்கு சொந்தமா? நகராட்சிக்கு உட்பட்டதா. யாருக்கு தான் சொந்தமென அடையாளமே தெரியல.
'பட்டா' ஆவணம் தயாரிக்க, தொழில்நுட்ப நுணுக்கம் தெரிந்தவங்க சும்மா விட்டா வெச்சிருப்பாங்க. எதுக்கு முனிசி.,காரங்க வேடிக்கை பாக்குறாங்க.