ADDED : ஜூலை 05, 2024 06:17 AM
நகர மக்களை காணோம்!
மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில, கிராமத்துக்காரங்க, பல கி.மீ., தொலைவில் இருந்தெல்லாம் வந்திருந்து அவங்க கோரிக்கைகளை தெரிவிச்சாங்க. நகர பகுதிக்கு உட்பட்ட 35 வார்டுகளில் வசிக்கிறவங்க, 5 சதவீதம் பேர் கூட குறை சொல்ல வரவேயில்லை.
அப்படீன்னா, இவங்களுக்கு குறையே இல்லையா அல்லது இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது பற்றி யாருக்குமே தெரியலையா. 35 வார்டுகளில் இருக்கிற கவுன்சிலர்களாவது வார்டு பிரச்னைகளை சொல்லி தீர்வு காண செய்திருக்கலாமே. கால்வாயை கூட விடாமல் ஆக்கிரமிப்பு செய்றாங்க. சில இடங்களில் நடைபாதைகளை காணவில்லை.
சல்டானா சதுக்கம் அருகில் பள்ளிகள், கோவில்கள், குடியிருப்பு வீடுகள் இருக்கும் இடத்தில் மதுபான கடை நடத்த அரசு அனுமதி வழங்கியதை தேசப் பிதா ஆட்சி ஏத்துக்குதா. இந்த குறையை வந்து சொல்லி, மதுபான கடைக்கு ஆப்பு வைக்காம விட்டுட்டாங்களேன்னு, நகரின் மீது அக்கறை உள்ளவங்க சொல்றாங்க.
கோர்ட் தீர்ப்பு என்னாச்சு?
மைன்ஸ் தொழிலாளர் நிலுவைத் தொகை வழங்க வேணும்னு கோர்ட் தீர்ப்பு வந்ததாலே பணம் கிடைக்க போகுதேன்னு சந்தோஷமா இருந்தது. இதை அரசின் காதுக்கு கொண்டு செல்ல வேண்டாமா. தீர்ப்பு சாதகமாக வந்ததால, கடமை முடிந்து போச்சுன்னு இருந்தா எப்படி?
மத்தியில் ஆளுங்கட்சி தயவை நாடியாக வேணும். தெனாவட்டு, பிரச்னைக்கு தீர்வாகாது. ஏற்கனவே வந்த கோர்ட் உத்தரவுங்க நடைமுறைக்கு வந்ததா தெரியலையே. குளோபல் டெண்டர் விட சொன்ன, பழைய கோர்ட் தீர்ப்பே அமலுக்கு வரல. இந்த நிலுவைத் தொகை பணமாகிலும் கிடைக்க செய்வாங்களான்னு எதிர்பாக்குறாங்க.
மீண்டும் வர்றாங்க!
சயனைட் மண் மலையை வெட்டி எடுத்து மறுசுழற்சி மூலம் கோல்டு எடுக்க சென்ட்ரல் கேட்ட பர்மிஷனுக்கு ஸ்டேட் ஒப்புதல் கொடுத்தாச்சு. புதிய மைன்ஸ் மினிஸ்டர், கனரக தொழில் மினிஸ்டர் கோலார் கோல்டு மீது பார்வை செலுத்த வேணும். தேவையான உதவிக்கு ஆபீசர்கள் தயாராக இருக்காங்க.
மண்ணை வெளியே கொண்டு போவாங்களா அல்லது இருக்கும் இடத்திலேயே மண்ணை மீண்டும் அரைத்தெடுத்து அலசி தங்கம் உட்பட உலோகங்கள் எடுத்துக் கொண்டு அதே இடத்தில் கொட்டுவாங்களான்னு இன்னும் யாருக்கும் தெரியலையாம்.
இதுவும் கூட குளோபல் டெண்டருக்கு விடப்போவதாக, 'டாப் லெவல்' பேச்சு ரகசியமா நடக்குதாம். புவியியல் ஆய்வுக் குழு, ஏற்கனவே பார்வையிட்டு அறிக்கையை சமர்ப்பித்திருக்காங்க. வெளிநாட்டு நபர்கள் வரப்போறாங்களாம். மீண்டும் இங்கிலீஷ் வாசம் தலை துாக்க போகுதாம்.
முடங்கிய சுகாதார துறை!
மாநில தலைநகரில், 'டெங்கு' மிரள வைக்கிறது. இது பற்றி பொன்னான சிட்டியில் எந்த விழிப்புணர்வும் இல்லை. கொசு ஒழிப்புக்கு புகை பரப்பும் பணியை தொடங்கல. உயிர் கொல்லி கொரோனா பாதிப்பு நேரத்தில் இருந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை போல், அதிரடி திட்டம் எதுவுமே இல்லை.
காக்க வேண்டிய சுகாதார துறை செயலிழந்து கிடக்குது. சேறும், சகதியும் தேங்கி உள்ளது. குவிந்துள்ள குப்பைகளில் கொசுக்கள் ரீங்காரம் பாடுது. கழிப்பறைகள், கால்வாய்களில் சாக்கடை மிதக்குது. பாதிப்பு வந்தால் தான் கவனிப்பாங்களா. சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆச்சு?