கோவிந்தா... கோவிந்தா!
கோவிந்தாவின் கருணை இல்லாமல் ஒருவரும் முனிசி., தலைவர் ஆக முடியாது என்ற நிலை 2வது கட்டத்திலும் தொடருது. முதல் ரவுண்டு தலைவர் பதவிக்கு, '2 சி' கோவிந்தாவின் உண்டியலுக்குள் விழுந்ததன் அனுபவம் பற்றி, நகரமே பேசினது.
தற்போது, இரண்டாம் கட்ட தலைவர் பதவிக்கும் கோவிந்தாவின் உண்டியலில் யார் அதிகமாக காணிக்கை செலுத்த போறாங்களோ அவருக்கு தான் அதிகார யோகம் கிடைக்கும் என்பதிலும் சந்தேகமே இல்லையென முனிசி., வட்டாரம் கூறுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், எஸ்.சி., பெண் இட ஒதுக்கீடு விவகாரத்தில், தலைவர் ஆக விரும்பும் போட்டியில், பேக்கரி 'டீலிங்' டயலாக் விவகாரம் பற்றி தான் ஓவராக பேசிக்கிறாங்க. என்ன தான் டீலிங் ஒர்க் அவுட் ஆனாலும், ஓட்டு போடுகிறவர்களில் சில சுயமரியாதை நபர்களும் இருக்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவித்ததும், 'டூர்' செல்ல சுயமரியாதை விரும்பும் அணி ஒன்று தயாராக இருப்பதாகவும் சொல்லிக்கிறாங்க. ஜெயிக்க போவது யாரென்று விரைவில் தெரிய போகுது.
துணை தலைவருக்கு 'மாஜி?'
முனிசி.,யில் தலைவராக இருந்த பெர்ர்ய தலைவர்களே பதவியை விட்டு இறங்கிய பின், துணை தலைவர்களாகவும் இருந்தாங்க. எப்படியோ அதிகாரம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கையாக இருந்தது.
அதேபோலவே இப்போதும் கூட ஏற்கனவே தலைவராக இருந்த ஒருத்தர் துணைத் தலைவர் பதவிக்கு தயாராகி விட்டதாக 'கை' அணியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவரை ஓவர்டேக் செய்றதுக்கு சரியான ஆளு யாரும் இல்லை என்றும் சிலரின் கருத்து.
ஆயினும் தொகுதி அசெம்பிளி மேடம் ஆசி இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் என்கிறாங்க. து.த., பதவிக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஏழு பேர் இருப்பதில் ஐந்து மகளிரும் இருக்கின்றனர். யாரை துாண்டி விட்டு களம் இறக்க போறாங்களோ?
1,000 பேரை மறந்துட்டாங்க!
மைனிங் தொழிலாளர் கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பொசிஷன் சர்டிபிகேட்டை அப்போதைய பூக்கார, 'முனி'யால் அவசர அவசரமாக 2,000 பேருக்கு தான் ஐந்து மணி நேரத்தில் கொடுக்க முடிஞ்சது. மீதமுள்ள 1,000 பேருக்கு விரைவில் தருவதாக சொன்னாரு. ஆனால் முழுசா மூன்று மாதம் முடிந்தும் இன்னும் கூட வழங்காமல் கிடப்பில் போட்டு வெச்சிருக்காங்க.
பாவம் அந்த 'முனி'க்கு எலக் ஷனில் போட்டியிட பூக்கட்சி சீட் தராமல், கூட்டணி கட்சிக்கு தொகுதியை தள்ளி விட்டுருச்சு. இதனால் பொசிஷன் சர்ட்டிபிகேட்டை வழங்க யாரும் முன் வந்ததாக தெரியல. இந்த 1,000 பேருக்கும் இப்ப உள்ள புல்லுக்கட்டு கட்சி எம்.பி.,யாவது சர்டிபிகேட் வழங்க முன்வருவாரா என்ற கேள்வி எழுந்திருக்குது.
'கோல்டு சிட்டி'க்கு டபுள் ஏழரை!
முனிசி.,யில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்காலம் 15 மாதங்கள் மட்டுமே. எனவே இதை இரண்டாக பிரித்து ஏழரை, ஏழரை, மாதங்களாக பிரித்து வாய்ப்பு தரப் போவதாக யோசிக்கிறாங்களாம். கோல்டு சிட்டிக்கு டபுள் ஏழரையா?
இது ஒன்றும் புதிய பார்முலாவே இல்லை. ஏற்கனவே நகர வளர்ச்சி குழுமத்தில் நான்கு ஆண்டுகளில் 4 தலைவர்களை உருவாக்கின அனுபவம் மேடமுக்கு இருக்குதே. அதனால் இதுவும் நடக்கலாம். இதனால், சிட்டி டெவலப்மென்ட் வேலைகள் நடக்குமா என்பது தான் மக்கள் மத்தியில் எழுந்துள்ள பெரிய அச்சம்.
ஊரே எரிகிற போது ஒரு மன்னர் பிடில் வாசித்த கதையை போல, 'இ- காத்தா' விவகாரத்தில் ஊரே அவதிப்பட்டுக் கொண்டிருக்க ஒருத்தர் மட்டுமே குஷியாக இருந்ததை நகரமே மறக்கலயே. அதனால், அத்தகைய ஒருத்தருக்கு பதவி கிடைச்சா இருக்கிற கால்வாய்களுக்கும் பட்டா செய்துகொள்ள ஏழரை மாதமும் பத்தாதேன்னு பேசுறது காதில் விழுகிறது.