* 'சூப்பர் பவர்' முடிவு!
'கோல்டு சிட்டி முனிசி.,யில் 14 மாதமே உள்ள தலைவர், துணை தலைவர் பதவி காலத்திற்கு யாருமே நான் தான் என சொல்லக் கூடாது. நான் சொல்பவருக்கு தான் நீங்கள் ஓட்டு போடணும். இதுக்கு ஒத்து போகாதவங்க இப்பவே கெட் அவுட் ஆகிடலாம்' என ராணுவ கட்டுப்பாடு போன்ற உத்தரவை அசெம்பிளி மேடம் போட்டார். இதற்கு சம்மதித்த 27 பேரும், கையை கட்டி, வாயை பொத்தி, இரண்டரை, 'எல்'லை பவ்யமா வாங்கிட்டு போயிட்டாங்க.
ஆயினும், யாருக்கு தலைவர், துணை தலைவர் பதவி என்பதை சொல்லாமல் மர்மமாக வைத்து தேர்தல் நடக்கும் நேரத்தில், அடையாளம் காட்டுவதாக, தமது முழு சர்வ அதிகாரத்தையும் அசெம்பிளி மேடம் பயன்படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே தலைவர் ஆசையில் இருந்தவர்களுக்கு திக்.. திக்.. ஆனது. ஆயினும், 'சூப்பர் பவர்' உள்ள கோலார், 'மாஜி' வங்கிகாரரின் ஆசி இருப்பவர்கள் தான் பதவி நாற்காலியில் உட்கார முடியும் என்ற தகவல்கள் அலையடிக்கிறது.
-----
* மூடிய சிலைக்கு வயது 25!
தேசிய அளவில் கை கட்சியில் எல்லா அதிகாரமும் பாட்டியோட அப்பா, பாட்டி, அவரோட மகன், என வரிசையாக பி.எம்., அதிகாரத்தில் இருந்த குடும்பம் தான் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வராங்க.
அந்த குடும்பத்தில் கடைசியாக இருந்த பி.எம்., 'ரா.கா.,' சிலையை கோல்டு சிட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆ.பேட்டை பஸ் நிலையத்தில் நிறுவினாங்க.
திறந்து வைப்பதற்குள் சிலைக்குழு உட்கட்சி குழப்பத்தில் பீஸ் பீஸ் ஆனது. ஒண்ணு சேரவே முடியாமல் போனது. கந்தை துணியில் அந்த சிலை மூடப்பட்டே கிடக்குது. இந்த லட்சணத்தில் அவரோட, 'பர்த் டே' வை சில கைகாரர்கள் கொண்டாடுறாங்க.
இந்த சிலை அப்பகுதியில் மூடி கிடப்பதை அவமானமாக கருத மாட்டார்களா. முனிசி.,யும் கண்மூடி இருக்கலாமா. இன்னும் யாருக்காக தான் இச்சிலை திறக்க காத்திருக்கு என்று தெரியலையே.
-----
* கால்வாய் நிலம் மிஞ்சுமா?
முனிசி.,க்கு சொந்தமான பூங்கா, வடிகால், மழைநீர் கால்வாய் எங்கேயென தேட வேண்டி இருக்குது. இது முனிசி.,யின் சொத்து என இதுநாள் வரை அடையாளம் காட்ட, முனிசி.,யின் நிலத்திற்கு வேலி அமைத்து பெயர் பலகையை மாட்டவே இல்லை.
ஏரி நிலம் மட்டுமல்ல, இனி நடைபாதை, வடிகால், மழைநீர் கால்வாய் என எதையுமே விட்டு வைக்காமல் பட்டா தயார்படுத்தும் மாபியா கும்பல் இருப்பது நகருக்கே தெரியும்.
எனவே, ஆட்டம் போடும் அத்தகைய கில்லாடிகள் கையில் முனிசி., அதிகாரம் சிக்க போகுதாம். இதனால், ஊழல் நாறப் போகுதென இப்பவே ரீல் ஓடுகிறது. முனிசி., நிலம் மீட்க சட்டத்துக்கும் வேலை வரப்போகுது.
----
* அதிகாரம் இழக்கும் புல்லுக்கட்டு!
கோலார் முனிசி., முதல் கட்ட அதிகாரம் புல்லுக்கட்டு பெண் வசம் இருந்தது. இம்முறை அதை பறிக்க கை காரர்கள் கடும் முயற்சியில் உள்ளனர்.
பூவும், புல்லுக்கட்டு பெண்ணும் இணைந்து இருப்பதால், சிறுபான்மை பிரிவின் கட்சி, 'கை' பக்கம் தாவுவதற்கு சி.எம்., செகரட்டரி முகாமிட்டு முடித்து இருக்கிறார்.
பூவும், புல்லுக்கட்டு பெண்ணும் -11, கை- 12, சுயேச்சை -8, சிறுபான்மை கட்சி- 4 என இருப்பதால் முதற்கட்ட தேர்தலில் புல்லுக்கட்டை ஆதரித்தவங்க, 'உல்டா' ஆயிட்டாங்க.
இதனால் கோலாரிலும், புல்லுக்கட்டு அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
***

