ADDED : டிச 27, 2024 05:48 AM

பெங்களூரு பசவனகுடி எம்.என்.கிருஷ்ணராவ் பார்க், திப்பசந்திராவில் உள்ள சிசுபிரகா பள்ளி வளாகத்திற்கு சனி, ஞாயிற்றுக்கிழமை சென்று பார்த்தால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலம்பம், அடிமுறை உள்ளிட்ட பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். இதை முன்நின்று சொல்லி கொடுப்பவர் அய்யப்பன் என்ற தமிழர்.
பயிற்சி அளிப்பது குறித்து அய்யப்பன் வெளிப்படுத்திய கருத்துகள்:
எனது சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தாலுகா பந்தநல்லுார் கிராமம். இப்போது பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் மனைவி கவிதா, 1 வயது மகன் விஷ்ணுமித்ரனுடன் வசிக்கிறேன்.
டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். எங்கள் ஊரில் பாரம்பரிய விளையாட்டு சிலம்பம், அடிமுறை தான். இதனால் சிறுவயது முதலே எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
மானசீக குருக்கள்
எனக்கு 6 வயதாக இருக்கும் போது, சிலம்பம் சுற்றும் பயிற்சிக்கு பெற்றோர் சேர்த்து விட்டனர். நிறைய சிலம்ப, அடிமுறை ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்று உள்ளேன். ஆனால், எனக்கு கடலுாரின் அரசன், திருநெல்வேலியை சேர்ந்தவரும், ஓசூரில் வசிப்பவருமான ராஜா ஆகியோர் தான் மானசீக குருக்கள். இதனால் எனது பயிற்சி மையத்திற்கு அரசன், ராஜா பெயர் வரும் வகையில், 'கிங் கோப்ரா சிலம்பம்' என்று பெயர் வைத்து உள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன். இரு இடங்களிலும் என்னிடம் 80க்கும் மேற்பட்டோர் பயிற்சி எடுக்கின்றனர். 6 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வயது வரம்பு இல்லாமல் பயிற்சி கொடுக்கிறோம். புதிதாக சேருவோரை, நேரடியாக சிலம்பம் சுற்ற விட மாட்டோம். அவர்கள் உடல் நன்கு வளைந்து கொடுக்கும் வகையிலான, பயிற்சி தான் முதலில் அளிக்கப்படும்.
கிருஷ்ணர் பாதம்
கால்மானம் என்று ஒரு பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சியின் மூலம் காலை எப்படி வைத்து சிலம்பம் சுற்றுவது என்பது தெரியும். போர் கலை சிலம்பம், அலங்கார சிலம்பம், வரிசை பாடல் என்று பயிற்சிகளுக்கு பெயர் வைத்து உள்ளோம். குறிப்பாக நான், சார்பாட்டா பயிற்சி அளிக்கிறேன்.
குருவணக்கம், சக்தி பாதம், சிவன் பாதம், கிருஷ்ணர் பாதம், முருகர் பாதம், கணபதி வணக்கம், வீரபத்ரர் பாதம் என்று, ஏழு முறைகள் உள்ளன. சிலம்பம் கற்று கொள்வது வாழ்வியல் முறையை நமக்கு எடுத்து காட்டுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் கூட மனதை எப்படி ஒரே நிலையில் வைக்க வேண்டும் என்று எடுத்து காட்டுகிறது.
போர் சிலம்ப பயிற்சி என்பது, நமது கையில் எதுவும் இல்லாத போது, எதிராளிகள் நம்மை தாக்க வந்தால், எப்படி கையால் தடுத்து தப்பிப்பது என்று எடுத்து கூறுகிறது. அடிமுறையில் தெக்கன் களரி, வடக்கன் களரி என்று இரு முறை உள்ளது.
தெக்கன் களரி தமிழகத்திலும், வடக்கன் களரி கேரளாவிலும் அளிக்க கூடிய பயிற்சி. வேல்கம்பு, வாள் கேடயம் பயிற்சிகளும் அளிக்கிறோம். இது மன்னர்கள் பயன்படுத்திய முறை. சிலம்பம், அடிமுறை உள்ளிட்ட பயிற்சிகள் தற்காப்பு கலைக்காக மட்டும் இல்லை. உடல் உறுதிக்காகவும் தான்.
தற்காப்பு கலை
இந்த கால கட்டத்தில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு அதிகம் ஆளாகின்றனர். பாலியல் தொல்லை கொடுப்பவரிடம் இருந்து தப்பிக்க, தற்காப்பு பயிற்சியும் அளிக்கிறோம்.
எல்லா பயிற்சியும் முடித்த மாணவர்களுக்கு, இறுதியான மான் கொம்பு பயிற்சி அளிக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்னிடம் பயிற்சியில் இருப்பவர்களை ஓசூருக்கு அழைத்து சென்று, அங்கு உள்ள ஒரு அகாடமியில் அவர்கள் திறமையை வெளிப்படுத்த செய்வோம்.
பயிற்சிக்காக சிறுவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய்; பெரியவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். அந்த பணத்தில் பயிற்சிக்கு தேவையான பொருட்களை வாங்குகிறேன். நான் வேலை பார்க்கும் பணத்தில், குடும்பத்தை நடத்துகிறோம். வியாபார நோக்கில் இந்த கலையை கொண்டு செல்ல கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
தமிழ் மாணவர்கள் மட்டுமின்றி, மற்ற மொழியினருக்கும் பயிற்சி கொடுக்கிறோம். சிலம்ப பயிற்சியை கிங்கோப்ராசிலம்பம் என்ற யு டியூப்பிலும் சென்று பார்க்கலாம். எனது மொபைல் நம்பர்: 74110 74919.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.