UPDATED : ஆக 21, 2024 06:40 AM
ADDED : ஆக 21, 2024 12:05 AM

இம்பால், :'மணிப்பூரில், வகுப்புவாத வன்முறையை துாண்டும் வகையில், முதல்வர் பைரேன் சிங் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவை மக்கள் நம்ப வேண்டாம்' என, அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி - கூகி பிரிவினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்தது.
இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஓராண்டு காலமாக மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சியால், மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
எனினும், ஒருசில இடங்களில் அவ்வப்போது சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், மணிப்பூரில் வகுப்புவாத வன்முறையை துாண்டும் வகையிலும், மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும், அம்மாநில முதல்வர் பைரேன் சிங் பேசுவது போல, சமீபத்தில், சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து, மணிப்பூர் அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வன்முறையை துாண்டும் வகையில் முதல்வர் பைரேன் சிங் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ, 'எடிட்' செய்யப்பட்டது.
இது போன்ற ஆதாரமற்ற உள்ளடக்கங்களை மக்கள் நம்ப வேண்டாம்; பகிர வேண்டாம்.
இது குறித்து, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசாரணை நடக்கிறது. ஆதாரமற்ற செய்திகளை பரப்பும் நபர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் கடந்த நான்கு மாதங்களாக, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது.
இதை சீர்குலைக்கும் நோக்கில், சமூக விரோதிகள் எடிட் செய்யப்பட்ட ஆடியோவை பரப்பி உள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.