ADDED : ஆக 15, 2024 03:50 AM

பெங்களூரை சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. சுற்றுலா பயணியர் மனதிற்கு அமைதி தரும் இடமாக உள்ளது தட்டகெரே கிராமம்.
ராம்நகரின் கனகபுரா தாலுகாவில் உள்ளது தட்டகெரே. இயற்கை எழில் நிறைந்த இந்த கிராமத்தில், நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு பரந்து விரிந்த தட்டகெரே ஏரி உள்ளது. ஏரி கரையில் அமர்ந்து சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள் விரும்பும் இடமாகவும் உள்ளது. இயற்கை தொடர்பான புகைப்படங்களை, இங்கு நிறைய எடுத்துக் கொள்ளலாம்.
ஏரி அமைந்து உள்ள இடம், பன்னரகட்டா தேசிய பூங்காவுக்கு உட்பட்ட யானை வழித்தடத்தில் உள்ளது. வாய்ப்பு இருந்தால் துாரத்தில் இருந்து, காட்டு யானையை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்கள், ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாகவும் உள்ளது. கிராமத்திற்கு செல்லும் வழியின் இருபுறமும் பச்சை, பசலேன காட்சி அளிக்கிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் ஒரு நாள் பொழுதை போக்க ஏற்ற இடமாக விளங்குகிறது.
பெங்களூரில் இருந்து தட்டகெரே 40 கி.மீ., துாரத்தில் உள்ளது. பைக், காரில் எளிதாக சென்றடையலாம். பஸ்சில் சென்றால் கனகபுரா சென்று, அங்கிருந்து செல்ல வேண்டும்.
- நமது நிருபர் -