கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததால் மடாதிபதிகள் போராட்டம்
கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததால் மடாதிபதிகள் போராட்டம்
ADDED : மே 05, 2024 05:55 AM

ஹூப்பள்ளி: ஆன்மிக கூட்டம் நடத்த அனுமதி அளிக்காததால், அதிருப்தி அடைந்த மடாதிபதிகள் போராட்டம் நடத்தினர்.
ஹூப்பள்ளியின் வித்யாநகரின் ரம்பாபுரி திருமண மண்டபத்தில், ஷிரஹட்டி பகிரேஸ்வர மடத்தின் திங்களேஸ்வரா சுவாமிகள் தலைமையில், நேற்று மதியம் சாது, சன்னியாசிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காண்பித்து, கூட்டம் நடத்த, தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
கோஷம்
அதிருப்தி அடைந்த 50க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், சென்னம்மா சதுக்கத்தில் சிறிது நேரம் போராட்டம் நடத்தி, தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர்.
'மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் கொத்தடிமைகள் போன்று, அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்' என, அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அதன்பின் அங்கிருந்து பேரணியாக வந்து, ஹூப்பள்ளி மாநகராட்சி வளாகத்துக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது மடாதிபதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
'தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் அங்கு வர வேண்டும். கூட்டம் நடத்த அனுமதி அளிக்காதது ஏன் என்பது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும். கூட்டத்துக்கு இடையூறு செய்ததுடன், மடாதிபதிகளை கைது செய்வதாக கூறிய இன்ஸ்பெக்டர், மன்னிப்பு கேட்க வேண்டும்' என, மடாதிபதிகள் பிடிவாதம் பிடித்தனர்.
அரசியல் சாராத கூட்டம்
அதன் பின் அங்கு வந்த மாநகராட்சி கமிஷனர் ஈஸ்வர் உள்ளாகட்டி, “அனுமதி கோரிய கடிதத்தில், அரசியல் கூட்டம் என, எழுதியிருந்ததால் அனுமதி அளிக்கவில்லை. வழிபாடு இடத்தில் அரசியல் கூட்டம் நடத்த அனுமதி இல்லை. அதிகாரிகள் தங்கள் கடமையை செய்துள்ளனர். அரசியல் சாராத கூட்டம் நடத்த அனுமதி அளிக்கிறோம்,” என கூறி அனுமதி அளித்தார்.
திங்களேஸ்வரா சுவாமிகள் கூறியதாவது:
நாங்கள் சாது, சன்னியாசிகள் கூட்டம் நடத்த முடிவு செய்து, அனுமதி கேட்டு தேர்தல் கமிஷனில் கடிதம் கொடுத்தோம். இரவு வரை காத்திருக்கவைத்து, காலை அனுமதியளிப்பதாக கூறினார். இன்று (நேற்று) காலை 11:30 மணி ஆகியும், அனுமதி அளிக்காததால் நாங்கள் கூட்டத்தை நடத்த முற்பட்டோம்.
கூட்டம் தடுப்பு
அப்போது அங்கு வந்த போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் கூட்டம் நடத்த விடாமல் தடுத்தனர்.
மடாதிபதிகள் கூட்டம் நடத்தினால், தனக்கு பிரச்னை ஏற்படும் என்ற பீதியில், பிரஹலாத் ஜோஷி, தேர்தல் கமிஷன் மூலமாக எங்கள் கூட்டத்தை தடுத்தார்.
ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சியில் இப்போதும், பிரிட்டிஷ் அரசின் சட்டங்களே அமலில் உள்ளன. நாங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட, கூட்டம் நடத்தவில்லை.
போலீஸ் துறையும், தேர்தல் கமிஷனும் மத்திய அமைச்சரின் பணியாட்களை போன்று நடக்கின்றனர்.
இவ்வாறு அவர்கூறினார்.