ADDED : ஆக 28, 2024 07:53 AM
மும்பை : எமர்ஜென்சி திரைப்படத்தில் நடித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் போலீசாரின் உதவியை பா.ஜ., - எம்.பி.,யும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத் நாடியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட எமர்ஜென்சி திரைப்படம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. இதில், இந்திரா வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.
சீக்கியர்களை தவறாக சித்தரிக்கும் வகையில், இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி பல்வேறு சீக்கிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கங்கனாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஆறு பேர் அடங்கிய கும்பல் பேசும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. இதில், 'எமர்ஜென்சி திரைப்படம் வெளியானால் சீக்கிய சமூகத்தினரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். இந்த படத்திற்கு செருப்பு மாலைகள் வீசப்படும்' என, ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வீடியோவில் பேசிய மற்றொரு நபர், கங்கனாவுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ பதிவை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட கங்கனா ரணாவத், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநில போலீசார், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.