காங்கிரஸ் மீது இண்டியா கூட்டணியின் வருத்தம் தொடருகிறது
காங்கிரஸ் மீது இண்டியா கூட்டணியின் வருத்தம் தொடருகிறது
ADDED : ஏப் 27, 2024 11:20 PM
தங்கவயலில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது தங்களை அழைக்கவில்லை என்று 'இண்டியா' கூட்டணி கட்சியினர், காங்கிரஸ் மீது இன்னமும் வருத்தத்தில் உள்ளனர்.
தங்கவயலில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரசை ஆதரித்தன. ஆனால், காங்கிரசாரோ, இந்த கட்சிகளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அ.தி.மு.க.,வினரும் கூட காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டனர்
காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க 'இண்டியா' கூட்டணியினரை அழைக்கவில்லை. ஒரு பேச்சுக்கு கூட, காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்ட, இவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கவில்லை
செயல்வீரர்கள்
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கோலார் தொகுதி வேட்பாளராக ம.ஜ.த.,வின் மல்லேஸ் பாபு போட்டியிட்டார். ஆனாலும், தங்கவயலில் ம.ஜ.த.,வினருக்கு தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை
மாறாக, பா.ஜ.,வின் மூன்று கோஷ்டிகளுமே ஓட்டுக் கேட்டனர். அவர்களுடன் சேர்ந்து ஒத்துப்போனால் போதும் என்று முகத்தில் அடித்தாற்போல் வேட்பாளரே கூறியதால் செயல் வீரர்கள் வருத்தத்தில் உள்ளனர்
பா.ஜ.,வின் முக்கிய பிரமுகர் மளிகை கடையில், 48 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால், ஒரு தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். தேர்தல் நேரத்தில் யாரோ செய்த உள்குத்து வேலை என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் தேசியத் துணைத் தலைவர் வெங்கட்சாமி, சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் இக்கட்சி கொடியை கூட அவரால் பயன்படுத்த முடியாமல் போனது
இதே பெயரில் உள்ள இன்னொரு தேசியக் கட்சி, வேட்பாளரை களமிறக்காமல், கடைசி நேரத்தில் ம.ஜ.த.,வுக்கு ஓட்டளிக்க முடிவு செய்தது. இதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இந்த உத்தரவு, அக்கட்சியினரை சென்றடையவில்லை
சுரங்க குடியிருப்பு
முழுக்க முழுக்க மத்திய அரசை எதிர்நோக்கும் தொகுதிகளில் தங்கவயல் தொகுதியும் ஒன்று. ஆனால் தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதிகளில் பா.ஜ., - ம.ஜ.த., தேர்தல் பிரசாரம் சென்றடையவில்லை
சிட்டி பகுதியில் காங்கிரஸ் பக்கம் ஓட்டுகள் ஓ.கே., ஆனால் கிராமப்பகுதிகளில் 'ரொம்ப வீக்' என்பதே சிலரின் கருத்து
-நமது நிருபர் -

