கர்ப்பத்தை தொடர்வதும், கலைப்பதும் பெண்களே எடுக்க வேண்டிய முடிவு அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு
கர்ப்பத்தை தொடர்வதும், கலைப்பதும் பெண்களே எடுக்க வேண்டிய முடிவு அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 27, 2024 11:49 PM
பிரயாக்ராஜ்: 'தன் கர்ப்பத்தை தொடர்வதா அல்லது கலைப்பதா என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் பெண்களுக்கே உள்ளது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், தன் வீட்டில் தங்கி படித்து வந்த 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாக, அவரது தாய்மாமன் புகார் அளித்திருந்தார்.
போலீசார் அந்தச் சிறுமியை கண்டுபிடித்தனர். பரிசோதனையில், அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
தற்போது, 32 மாத கருவை கலைப்பதற்கு அந்தச் சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த அமர்வு, தன் உத்தரவில் கூறியதாவது:
தன் கர்ப்பத்தை தொடர்வதா அல்லது கலைப்பதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் பெண்களுக்கே உள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கரு, 32 வாரத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், கர்ப்பத்தைத் தொடர்வதால், அந்தச் சிறுமியின் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்படலாம் என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
அதே நேரத்தில், சிறுமியின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல், கருவைக் கலைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவே கூறப்படுகிறது.
தீவிர ஆலோசனைகளுக்குப் பின், கர்ப்பத்தைத் தொடரவும், பிறக்கும் குழந்தையை, தத்துக் கொடுக்கவும், அந்தச் சிறுமி மற்றும் பெற்றோர் முன்வந்துள்ளனர்.
இந்த சிறுமிக்குப் பிறக்கும் குழந்தையை முறையாக தத்துக் கொடுப்பதை, தனிப்பட்ட நிகழ்வாக இருப்பதை உறுதி செய்வது மாநில அரசின் பொறுப்பாகும். சிறுமி மற்றும் அவருடைய குழந்தைக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நம் நாட்டில், மருத்துவ காரணங்களுக்காக, 24 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைப்பதற்கு மட்டுமே சட்டப்பூர்வ உரிமை உள்ளது.