தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கியவர் வீட்டில் சாப்பிட்ட பா.ஜ., வேட்பாளர்
தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கியவர் வீட்டில் சாப்பிட்ட பா.ஜ., வேட்பாளர்
ADDED : ஏப் 19, 2024 06:34 AM

கலபுரகி: எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆர்.டி.பாட்டீல் வீட்டில், கலபுரகி பா.ஜ., வேட்பாளர் உமேஷ் ஜாதவ் உணவு சாப்பிட்டதால், சர்ச்சை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, 2021ல் தேர்வு நடந்தது. கடந்த 2022ல் தேர்வு முடிவுகள் வெளியான போது, தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
அதாவது, 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்து, சட்டவிரோதமாக சிலர் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் வெளியானது. அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ., அரசு சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது.
கலபுரகி அப்சல்பூரின் ஆர்.டி.பாட்டீல் என்பவர், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 மாதம் சிறையில் இருந்த அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், அப்போதைய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, உயர்கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயணாவுக்கு தொடர்பு இருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் எஸ்.ஐ., முறைகேடு குறித்து விசாரிக்க, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கல்யாண கர்நாடக வளர்ச்சி ஆணையத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப தேர்வு நடந்தது.
இந்த தேர்விலும் முறைகேடு நடந்தது. இந்த வழக்கிலும் ஆர்.டி.பாட்டீலுக்கு தொடர்பு இருந்தது. மஹாராஷ்டிராவில் பதுக்கி இருந்தவர் கைது செய்யப்பட்டு, கலபுரகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், கலபுரகி பா.ஜ., வேட்பாளர் உமேஷ் ஜாதவ், நேற்று முன்தினம் மாலை, கலபுரகி டவுனில் உள்ள ஆர்.டி.பாட்டீல் வீட்டிற்கு சென்றார்.
அங்கு உணவு சாப்பிட்டதுடன், லோக்சபா தேர்தலில் தன்னை ஆதரிக்கும்படி கேட்டு கொண்டார். இதுபோல எஸ்.ஐ., முறைகேடு வழக்கில் தொடர்புடைய, பா.ஜ., பிரமுகர் திவ்யா ஹாகரகியுடன் புகைப்படம் எடுத்து, அதை முகநுால் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இது குறித்து கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''எஸ்.ஐ., முறைகேடு வழக்கில், பா.ஜ.,வினருக்கு தொடர்பு உள்ளது என்று, ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வந்தோம்.
அதை உண்மை என்று, உமேஷ் ஜாதவ் நிரூபித்து உள்ளார்.
''தேர்வில் முறைகேடு செய்து, ஆயிரக்கணக்கான தேர்வர்கள் வாழ்க்கையில் விளையாடிய, ஆர்.டி.,பாட்டீல் வீட்டிற்கு உமேஷ் ஜாதவ் சென்றது ஏன். அங்கு சென்று சாப்பிட வேண்டிய அவசியம் என்ன?
''ஊழலை ஒழிப்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடி ஒரு பக்கம் பேசுகிறார். இன்னொரு பக்கம் அவரது கட்சியினர், ஊழல்வாதிகள், தேர்வில் முறைகேடு செய்தவர்கள் வீடுகளில் உணவு சாப்பிடுகின்றனர்,'' என்றார்.

