ADDED : மே 10, 2024 01:26 AM

சண்டிகர், ஹரியானா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ., அரசுக்கு அழைப்பு விடுக்க உத்தரவிடும்படி, மாநில கவர்னருக்கு ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார்.
ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மொத்தம், 40 எம்.எல்.ஏ.,க்கள் உடைய பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்து வந்த மூன்று சுயேச்சைகள் தங்கள் ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து சட்டசபையில் பா.ஜ.,வின் பலம் குறைந்தது.
மொத்தம் 30 எம்.எல்.ஏ.,க்கள் உடைய காங்கிரஸ் கட்சிக்கு, புதிதாக ஆதரவு அளித்துள்ள சுயேச்சைகளையும் சேர்த்து, 33 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மேலும், 10 எம்.எல்.ஏ.,க்களை உடைய ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சியும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் பா.ஜ., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜே.ஜே.பி., தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா, மாநில கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், பா.ஜ., அரசின் பெரும்பான்மையை சபையில் நிரூபிக்க உத்தரவிடும்படி கோரியுள்ளார்.
இது குறித்து துஷ்யந்த் சவுதாலா கூறியதாவது:
மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற பின் பா.ஜ., அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை நாங்கள் ஆதரிப்போம் என தெளிவாக தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக கவர்னருக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் காங்., இறங்க வேண்டும். பா.ஜ., அரசுக்கு பெரும்பான்மை இல்லாதபட்சத்தில் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரை சந்திக்க, காங்.,கை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் அப்தாப் அகமது நேரம் கேட்டுள்ளார். இதற்கிடையே , ஜே.ஜே.பி., கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள் நேற்று பா.ஜ., தலைவர்களை சந்தித்து பேசினர். இதனால், ஜே.ஜே.பி., கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.