பா.ஜ., தந்தது மூன்று தொகுதிகள் 2ல் தேவகவுடா குடும்பம் போட்டி
பா.ஜ., தந்தது மூன்று தொகுதிகள் 2ல் தேவகவுடா குடும்பம் போட்டி
ADDED : மார் 27, 2024 12:48 AM

பெங்களூரு, பா.ஜ., கூட்டணியில் மூன்று இடங்களை பெற்ற ம.ஜ.த., சார்பில், இரண்டு தொகுதிகளில், தேவகவுடாவின் குடும்பத்தினரே போட்டியிடுகின்றனர். இதன்படி, மாண்டியாவில் குமாரசாமியும்; ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவும் களம் இறங்குகின்றனர்.
கர்நாடகாவில், லோக்சபா தேர்தலை ஒட்டி, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளை கேட்டு வந்த ம.ஜ.த.,வுக்கு மூன்று தொகுதிகளை மட்டுமே பா.ஜ., ஒதுக்கீடு செய்தது. இதன்படி, ம.ஜ.த.,வுக்கு மாண்டியா, ஹாசன், கோலார் -- தனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி நேற்று பெங்களூரில் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் போட்டியிடும்படி பா.ஜ., தலைவர்கள், ம.ஜ.த.,வின் பெரும்பாலானோர் கூறியதால், இத்தொகுதியில் போட்டியிட உள்ளேன். ஹாசன் தொகுதியில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதையே எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவே போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
'கோலாரில் மல்லேஸ் பாபு போட்டியிடுவார்' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று அறிவித்தார். இந்த மூன்று பேரில் குமாரசாமி, தேவகவுடாவின் இரண்டாவது மகன். பிரஜ்வல், தேவகவுடாவின் முதல் மகன் ரேவண்ணாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

