கங்கையில் கட்டப்படும் பாலம் மூன்றாவது முறையாக இடிந்தது
கங்கையில் கட்டப்படும் பாலம் மூன்றாவது முறையாக இடிந்தது
UPDATED : ஆக 18, 2024 12:16 AM
ADDED : ஆக 17, 2024 11:59 PM

பாட்னா: பீஹாரில், கங்கையாற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் மூன்றாவது முறையாக நேற்று இடிந்து விழுந்ததை அடுத்து, இந்த பாலத்தை முற்றிலும் இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
பீஹார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பழைய பாலங்கள், கட்டுமானப்பணியில் உள்ள பாலங்கள் என மாறி மாறி இடிந்து விழும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்நிலையில் பாகல்பூர், ககாரியா மாவட்டங்களை இணைக்கும் வகையில் 3.16 கி.மீ., தொலைவுக்கு பாலம் ஒன்று, கங்கை ஆற்றின் மீது கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை.
முன்னதாக இந்த பாலம் கடந்த 2022 மற்றும் 2023ல் அடுத்தடுத்து இடிந்து விழுந்த நிலையில் நேற்று மூன்றாவது முறையாக இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'பாலத்தின் முழு கட்டுமானமும் பழுதடைந்ததாக கருதப்பட்டு பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பாலம் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்படும். அதற்கு பின் மீண்டும் புதிதாக பாலம் கட்டப்படும்' என்றனர்.