ADDED : ஜூன் 09, 2024 04:05 AM

மைசூரு ; வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட, தங்கையை அழைத்துச் செல்ல வந்த, அண்ணன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மைசூரு டவுன் குவெம்புநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரா, 30. இரண்டு ஆண்டுக்கு முன்பு வித்யா, 26, என்பவரை திருமணம் செய்தார். குழந்தை இல்லை.
சில மாதங்களாக, வரதட்சணை வாங்கி வரும்படி, மனைவிக்கு, ரவிச்சந்திரா தொல்லை கொடுத்ததுடன், தினமும் துன்புறுத்தி உள்ளார். இதுபற்றி வித்யாவின் அண்ணன் அபிஷேக், 27, என்பவருக்கு தெரியவந்தது.
நேற்று காலை தங்கை வீட்டிற்குச் சென்ற அபிஷேக், வித்யாவை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரவிச்சந்திரா தகராறு செய்தார். வீட்டின் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து, அபிஷேக்கை குத்தினார்.
வயிற்றில் பலத்த காயம் அடைந்த அபிஷேக் இறந்தார். தலைமறைவாக உள்ள ரவிச்சந்திராவை, குவெம்பு நகர் போலீசார் தேடி வருகின்றனர்.