சிறுமியை திருமணம் செய்ய தொல்லை கொடுத்த சகோதரர்கள் குத்தி கொலை
சிறுமியை திருமணம் செய்ய தொல்லை கொடுத்த சகோதரர்கள் குத்தி கொலை
ADDED : மே 09, 2024 05:20 AM
பெலகாவி : மைனர் மகளை திருமணம் செய்து வைக்கக் கேட்ட வாலிபரும், தடுக்க வந்த அவரது சகோதரரும் கொலை செய்யப்பட்டனர். சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார்.
பெலகாவி மாவட்டம், கரிமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பகிரப்பா பாம்விஹால், 50. இவரது மைனர் மகளை, அதே கிராமத்தைச் சேர்ந்த மாயப்பா சோமப்பா அலகொடி, 20, ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
தன்னை காதலிக்குமாறு, சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். மாயப்பாவை கண்டிக்கும்படி, அவர் குடும்பத்தினரிடம் பகிரப்பா கூறியுள்ளார். ஆனால் தொல்லை கொடுப்பதை மாயப்பா நிறுத்தவில்லை.
நேற்று முன்தினம் இரவு, பகிரப்பா பாம்விஹால் வீட்டுக்கு வந்த மாயப்பா சோமப்பா அலகொடி, அவர் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு கலாட்டா செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அவர் சகோதரர் எல்லப்பா சோமப்பா அலகொடியும், 22, அங்கு வந்தார். அப்போது மாயப்பா சோமப்பாவுக்கும், பகிரப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது.
கோபமடைந்த பகிரப்பா, வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து, மாயப்பா சோமப்பாவை கத்தியால் குத்தினார். இதைத் தடுக்க வந்த எல்லப்பா சோமப்பாவையும் கத்தியால் குத்திவிட்டு பகிரப்பா தப்பியோடினார்.
இந்த சம்பவத்தில் மாயப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய எல்லப்பாவை அப்பகுதியினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லப்பா நேற்று காலை இறந்தார்.
தலைமறைவாக இருந்த பகிரப்பா பாம்விஹாலை, முரகோடா போலீசார் நேற்று கைது செய்தனர்.