ADDED : மே 18, 2024 02:07 AM

பெலகாவி: ''லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், அமைச்சரவை விஸ்தரிக்கப்படாது. இது தொடர்பாக, கட்சி மேலிடம் முடிவு செய்யும்,'' என பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு சீர் குலையவில்லை. நேஹா, அஞ்சலி கொலை போன்று, அனைத்து அரசுகளின் காலத்திலும் நடந்துஉள்ளன.
குற்ற சம்பவங்கள் நடக்காமல், போலீஸ் துறை கண்காணிக்க வேண்டும்.
பெலகாவியில் பொதுப்பணித்துறை சார்பில் பெலகாவி மாவட்டத்தில் 100 புதிய பள்ளிகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா ஐந்து பள்ளிகள் கட்டும் திட்டம் உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது, அரசின் குறிக்கோளாகும்.
காங்கிரஸ் வெற்றி
லோக்சபா தேர்தலில் பெலகாவி, சிக்கோடி உட்பட 14 முதல் 17 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். வட மாவட்டங்களில் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாது.
காங்கிரசில் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு, சீட் கொடுத்தது, கட்சி மேலிடத்தின் முடிவாகும். பா.ஜ.,வினருக்கு விமர்சிக்கும் உரிமை இல்லை. பா.ஜ.,விலும் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு சீட் கொடுத்த உதாரணங்கள் உள்ளன. இந்த நடைமுறை அனைத்து கட்சிகளிலும் உள்ளது.
பெலகாவியில் எந்த இடத்திலும், குடிநீர் பிரச்னை இல்லை. ஏற்கனவே மழை துவங்கிவிட்டது. குடிநீர் வினியோகிக்க, புதிதாக டாங்கர் வாங்கும்படி, கிராம பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். சில கிராம பஞ்சாயத்துகள் புதிய டாங்கர் வாங்கினர். மற்ற கிராமங்களில் வாடகை டாங்கர்களில் குடிநீர் வழங்குகின்றனர்.
கொய்னா அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, ஏற்கனவே மஹாராஷ்டிர அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து விடுவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஹிடகல் அணையில் இருந்து, கிருஷ்ணா ஆற்றுக்கு ஏற்கனவே ஒரு டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்பட்டது. விரைவில் மற்றொரு டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

