டி.டி.ஏ., துணை தலைவர் மீதான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன் பட்டியல்
டி.டி.ஏ., துணை தலைவர் மீதான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன் பட்டியல்
ADDED : ஆக 29, 2024 09:39 PM
பகர்கஞ்ச்:தெற்கு ரிட்ஜின் சத்பரி பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் சுபாசிஷ் பாண்டாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.
சத்தர்பூரிலிருந்து தெற்காசிய பல்கலைக்கழகத்திற்கு சாலை அமைப்பதற்காக தெற்கு ரிட்ஜின் சத்பரி பகுதியில் ஏராளமான மரங்களை வெட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் டி.டி.ஏ., அனுமதி கோரியிருந்தது.
சாலை அமைக்கும் பணிக்காக 1,051 மரங்கள் வெட்ட அனுமதி கோரப்பட்டது. டி.டி.ஏ., மனு தெளிவற்றதாக இருப்பதாகக் கூறிய உச்ச நீதிமன்றம் மரங்கள் வெட்ட அனுமதி மறுத்ததுடன், மாற்ற வழிகள் குறித்து ஆலோசிக்கும்படி டி.டி.ஏ.,வுக்கு உத்தரவிட்டிருந்தது.
வனப்பகுதிக்குள் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அத்துறையிடம் அனுமதி பெறாததையும் கவனத்தில் கொண்டது.
இதற்கிடையில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டன. இதையடுத்து டி.டி.ஏ.,வுக்கு பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கு டி.டி.ஏ., துணைத் தலைவர் தாக்கல் செய்த பதில் மனுவில் பொய்யான தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.
இதையடுத்து டி.டி.ஏ., துணைத் தலைவர் சுபாசிஷ் பாண்டாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முடிவு செய்தது. இதற்காக அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு கிரிமினல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இப்போது தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது.