இறக்குமதி வரியை உயர்த்திய மத்திய அரசு எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு பலன் வெங்காயம் விலை உயர்வை தடுக்கவும் நடவடிக்கை
இறக்குமதி வரியை உயர்த்திய மத்திய அரசு எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு பலன் வெங்காயம் விலை உயர்வை தடுக்கவும் நடவடிக்கை
ADDED : செப் 14, 2024 09:58 PM

புதுடில்லி:சூரியகாந்தி, சோயா பீன் மீதான சுங்கவரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால், உள்நாட்டில் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்காய ஏற்றுமதி வரி, 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், பாசுமதி அரிசி, வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையும் நீக்கப்பட்டு உள்ளது.
இதனால், இவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள், தாங்கள் விரும்பும் விலையில் ஏற்றுமதி செய்ய இயலும். மேலும், 20 சதவீதம் வரி குறைவதால், வெங்காயம் ஏற்றுமதியில் கூடுதல் லாபம் ஈட்டவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், உள்நாட்டில் கிலோ வெங்காயத்தின் சராசரி விலை, 65 ரூபாயை எட்டிய நிலையில், அரசு இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை சென்னை உட்பட பெருநகரங்களில் நபெட், என்.சி.சி.எப்., ஆகியவற்றின் வாயிலாக, மானிய விலையில், கிலோ 35 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளதாக, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துஉள்ளது.
வாகனங்களில், குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று, இந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுவதுடன், ஆன்லைன் வணிகத்திலும் அனுமதிக்கப்படுகிறது. இதையடுத்து, மொத்த விலையில் வெங்காயம் ஒரே நாளில், கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
கச்சா பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுஉள்ளது.
இதனால், சமையல் எண்ணெய் ரகங்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு, உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மஞ்சள் நிற பட்டாணியை குறைந்தபட்ச விலை மற்றும் துறைமுக கட்டுப்பாடு ஏதுமின்றி இறக்குமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.