'நீட்' தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு எதிர்ப்பு
'நீட்' தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு எதிர்ப்பு
ADDED : ஜூலை 06, 2024 02:29 AM

புதுடில்லி, 'முறைகேடு நடந்ததாக கூறி, ஏற்கனவே நடந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது, நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'நீட்' எனப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, மே 5ல் நடந்தது.
ஜூன் 4ல் வெளியான முடிவுகளில், நீட் தேர்வு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர்.
மேலும், குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும், வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது.
நீட் இளநிலை தேர்வை ரத்து செய்யக் கோரி, தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:
நீட் முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே நேரம், இத்தேர்வில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவுகளையும் ரத்து செய்வது சரியாக இருக்காது.
இதுபோன்ற நடவடிக்கைகள், நேர்மையாக தேர்வு எழுதிய, தகுதியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக கூற முடியாது. எந்தவித அடிப்படையும் இல்லாமல், மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீட் தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களையும், வரும் 8ல் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
நீட் இளநிலை தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஜூன் 23ல் நடக்கவிருந்த நீட் முதுநிலை தேர்வு, ஜூன் 22ல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், என்.பி.இ.எம்.எஸ்., நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'ஒத்தி வைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு, ஆக., 11ல் இரு வேளைகளில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.