சென்னையில் 35 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் அடுத்த வாரம் முதல் விற்கிறது மத்திய அரசு
சென்னையில் 35 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் அடுத்த வாரம் முதல் விற்கிறது மத்திய அரசு
ADDED : செப் 07, 2024 01:46 AM
சென்னையில், மலிவு விலை விற்பனையாக அடுத்த வாரம் முதல், 35 ரூபாய்க்கு, 1 கிலோ வெங்காயம், நடமாடும் வேன்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுதும், உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப்பொருளான வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
விளைச்சல் குறைவு
குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், பருவமழை காரணமாக, காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இவற்றின் வரத்து குறைந்துள்ளதால், நாட்டில் பல்வேறு முக்கிய மாநிலங்களின் தலைநகரங்களில், காய்கறிகளின் சில்லரை விற்பனை உச்சம் தொட்டுள்ளது.
குறிப்பாக, வெங்காயத்தின் விலை உயர்வால், எல்லா மாநிலங்களிலும் மக்கள் அவதிப்பட துவங்கியுள்ளனர்.
வெங்காயத்தின் தேவை கருதியும், பொதுமக்களிடையே எந்த வகையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அதன்படி, நடமாடும் வேன்கள் மற்றும் கூட்டுறவு கடைகள் வாயிலாக 35 ரூபாய்க்கு, 1 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.
முதற்கட்டமாக, டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இந்த சில்லரை விற்பனை துவங்கப்பட்டுள்ளது. நடமாடும் வேன்களில் வெங்காய விற்பனையை, டில்லியில் துவங்கி வைத்த மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நிருபர்களிடம் பின்னர் கூறியதாவது:
உணவு பொருட்கள் மீதான பணவீக்கத்தை, கட்டுக்குள் வைத்திருப்பது மத்திய அரசின் முன்னுரிமை. பணவீக்க விகிதத்தை குறைப்பதற்கும், உணவு பொருட்களின் விலையை நிலையாக வைத்திருக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில், மத்திய அரசிடம் வெங்காய கையிருப்பானது, 4.7 லட்சம் டன்னாக இருக்கிறது.
விலை நிலைப்படுத்துதல் நிதியம் என்ற அமைப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது, அதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
முக்கிய இடங்கள்
முதற் கட்டமாக, டில்லியிலும், மும்பையிலும், வாகனங்கள் வாயிலாக வெங்காயத்தின் சில்லரை விற்பனை துவங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, கோல்கட்டா, கவுகாத்தி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, ஆமதாபாத், ராய்ப்பூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில், விற்பனை துவங்கும்.
அனேகமாக அடுத்த வாரம் முதல், இந்த நகரங்களில் விற்பனை துவங்கும். அங்குள்ள கூட்டுறவு மற்றும் ரேஷன் கடைகள், நடமாடும் வேன்கள் ஆகியவற்றில் வெங்காயம் வைக்கப்பட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த விற்பனை நடைபெறும்.
செப்டம்பர் மூன்றாவது வாரத்திற்குள், நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும், சில்லரை விற்பனையாக, 35 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் விற்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -