ADDED : ஏப் 27, 2024 11:13 PM

கலபுரகி: ''கர்நாடகாவில் முதல்கட்டமாக தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெறும்,'' என, முதல்வர் சித்தராமையா அதீத நம்பிக்கை வெளிப்படுத்தி உள்ளார்.
முதல்வர் சித்தராமையா கலபுரகியில் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., எப்போதும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி. தலித்களுக்கு மண்டல் கமிஷன் இடஒதுக்கீடு பரிந்துரை செய்தபோது, அக்கட்சி எதிர்த்தது. ராஜிவ் பிரதமரான பின்னர் தலித், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார். அவருக்கு பின்னர் பிரதமர் ஆன நரசிம்மராவ் இடஒதுக்கீடு உத்தரவை அமல்படுத்தினார்.
தேவகவுடா முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் இடஒதுக்கீடு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. வீரப்ப மொய்லி முதல்வராக இருந்தபோது இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
பஞ்சாயத்து தேர்தலில் பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, முன்னாள் பா.ஜ., - எம்.பி., ரமா ஜோய்ஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பிரமாண பத்திரம்
பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு கொடுத்து உள்ளதாக, எங்கள் அரசு மீது பா.ஜ., குற்றஞ்சாட்டியது. இது அப்பட்டமான பொய். பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது லிங்காயத், ஒக்கலிகர்கள் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினர்.
முஸ்லிம்களிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறித்துக் கொடுத்தார். இதை கேள்வி கேட்டு சிலர் நீதிமன்றம் சென்றனர். இதனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடரும் என, பா.ஜ., அரசு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் அளித்தது.
தவறான தகவல் பரப்பும் பா.ஜ., மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கும்படி, எங்கள் கட்சித் தலைவர் சிவகுமாரிடம் கூறி உள்ளேன்.
கடந்த ஆண்டு டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, வறட்சி நிவாரணமாக 18,172 கோடி ரூபாய் ஒதுக்க கோரிக்கை வைத்தோம். இப்போது 3,453 கோடி ரூபாய் மட்டும் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவேன்.
மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்துள்ளது. இவற்றில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களிடம் கேட்டு, தகவல் பெற்று உள்ளேன். மாநிலத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

