ADDED : மார் 02, 2025 06:15 AM
மைசூரு: முதல்வர் சித்தராமையாவின் வீடு கட்டுமான பணிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் கிரஹ பிரவேசம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூரு நகரின், விஸ்வ மானவா இரட்டை சாலையில், முதல்வர் சித்தராமையா புதிதாக சொந்த வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இரண்டு மாதங்களில் கிரஹ பிரவேசம் நடத்த, முதல்வர் தயாராகி வருகிறார். இதனால், முதல்வரின் புதிய வீட்டின் அருகில், 100 மீட்டர் எல்லைக்குள் உள்ள காய்கறிகள் கடை, ஹோட்டல், பாஸ்ட் புட் கடைகளை அப்புறப்படுத்த, மைசூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதே பாதையில் 35 ஆண்டுகளாக, 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர். தற்போது இவர்களை வெளியேறும்படி, மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.
மைசூரு நகரின், பல இடங்களில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில், சாலைகளிலேயே நடைபாதைகளில் கடைகள் வைத்துள்ளனர். இதை மாநகராட்சி அப்புறப்படுத்தவில்லை. ஆனால் முதல்வர் வீட்டின் சுற்றுப்பகுதிகளின் கடைகளை அகற்ற முற்படுவதால், கடைக்காரர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.