கர்நாடகாவில் தேர்தல் முடிந்தாலும் ஜூன் 6 வரை நடத்தை விதிகள் அமல்
கர்நாடகாவில் தேர்தல் முடிந்தாலும் ஜூன் 6 வரை நடத்தை விதிகள் அமல்
ADDED : மே 11, 2024 06:56 AM

பெங்களூரு: 'நாட்டின் மற்ற பகுதிகளில் இருப்பது போல், கர்நாடகாவிலும் ஜூன் 6ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்,'' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்தார்.
நாடு முழுதும், மார்ச் 16ம் தேதி முதல், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
கர்நாடகாவில், ஏப்ரல் 26ம் தேதி 14 தொகுதிகளுக்கும்; மே 7ம் தேதி 14 தொகுதிகளுக்கும், லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
தேர்தல் முடிந்துவிட்டால், கர்நாடகாவில் வளர்ச்சிப் பணிகள் துவங்கலாம் என்று ஆளுங்கட்சியினர் கருதினர். ஆனால், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் விலக்கும்படி யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. விலக்கு அளிப்பதற்கு வாய்ப்பும் இல்லை. நாட்டின் மற்ற பகுதிகளில் இருப்பதுபோல், கர்நாடகாவிலும் ஜூன் 6ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, மாநில தலைமை செயலர் தலைமையில், பொறுப்பு கமிட்டி உள்ளது. அந்த கமிட்டி ஆலோசனை நடத்தி, மேற்கொள்ள வேண்டிய பணிகளை எங்களுக்கு அனுப்பி வைப்பர்.
நாங்கள் பரிசீலனை செய்து, மத்திய தேர்தல் கமிஷன் அனுமதிக்கு அனுப்பி வைப்போம். அனுமதி கிடைத்த பின்னரே, பணிகள் மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கூறினார்.