சுதந்திர பூங்கா 'பார்க்கிங்' கட்டடம் டெண்டர் எடுத்த நிறுவனம் நஷ்டம்
சுதந்திர பூங்கா 'பார்க்கிங்' கட்டடம் டெண்டர் எடுத்த நிறுவனம் நஷ்டம்
ADDED : ஜூலை 25, 2024 10:56 PM

பெங்களூரு: சுதந்திர பூங்காவில், பெங்களூரு மாநகராட்சி கட்டிய பல அடுக்கு வாகன பார்க்கிங் கட்டடத்தால், எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. எனவே ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தினர், அதை தொடர்வது சிரமம் என புலம்புகின்றனர்
பெங்களூரின் சுதந்திர பூங்கா, போராட்டத்துக்கு பிரசித்தி பெற்றது. தினமும் ஏதாவது ஒரு போராட்டத்தை காணலாம். விவசாயிகள், அரசு ஊழியர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கன்னட அமைப்பினர், அரசியல் கட்சிகள் என, பலரும் போராட்டம் நடத்துகின்றனர்.
இதன் விளைவாக சுற்றுப்பகுதி ரோடுகளில், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூட முடியாத சூழ்நிலை உள்ளது. இங்குள்ள ரோடுகளில் குறுக்கும், நெடுக்குமாக வாகனங்களை நிறுத்துவதால், மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து பாதிக்கிறது.
மக்கள் பாதிப்பு
இதற்கு தீர்வு காணும் வகையில், சுதந்திர பூங்காவில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில், பல அடுக்கு பார்க்கிங் கட்டடத்தை, மாநகராட்சி கட்டியது.
இந்த கட்டடம் அதிநவீன வசதிகள் கொண்டுள்ளது. 600 கார்கள், 750 பைக்குகள் நிறுத்தும் வசதி உள்ளது. நடப்பாண்டு ஜூன் 21ல், புதிய கட்டடத்தை துணை முதல்வர் சிவகுமார் திறந்து வைத்தார்.
கட்டடத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனம் ஏற்றுள்ளது. மக்கள், இங்கு கட்டணம் செலுத்தி, வாகனத்தை நிறுத்தலாம். இவர்களிடம் நிறுவனம் கட்டணம் வசூலிக்கும்.
மாநகராட்சிக்கு நிர்ணயித்த வாடகை செலுத்த வேண்டும். ஆனால், பார்க்கிங் கட்டடத்தை பயன்படுத்துவதில், மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை. தினமும் 40 கார்கள், 15 முதல் 20 பைக்குகள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறுகளில் பார்க்கிங் கட்டடம் காலியாக உள்ளது.
ரூ.4.73 லட்சம்
ஒப்பந்த நிறுவனத்துக்கு, தினமும் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரே மாதத்தில் 4.73 லட்சம் ரூபாய் மின் கட்டண பில் வந்துள்ளது. 'ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். எனவே, ஒப்பந்தத்தை தொடர முடியாது' என, மாநகராட்சிக்கு ஒப்பந்த நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
கட்டடத்தின் சுற்றுப்புற ரோடுகளில், பார்க்கிங் தடை சட்டம் சரியாக செயல்படுவதில்லை. இதனால் ரோடுகளிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். பார்க்கிங் கட்டடத்தை யாரும் பயன்படுத்துவதில்லை.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
ஆரம்ப நாட்களில் பிரச்னை இருக்கும். பார்க்கிங் கட்டடத்தின் சுற்றுப்பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த உத்தரவை கடுமையாக செயல்படுத்த வேண்டியது, அவர்களின் பொறுப்பாகும். பார்க்கிங் தடை உள்ள சாலைகளில், வாகனங்களை, 'டோயிங்' செய்யும் அதிகாரத்தை, ஒப்பந்த நிறுவனத்துக்கு அளிக்க, மாநகராட்சி ஆலோசிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

