உள்விளையாட்டு அரங்கத்தின் கட்டுமான பணி நாளை துவக்கம்
உள்விளையாட்டு அரங்கத்தின் கட்டுமான பணி நாளை துவக்கம்
ADDED : ஆக 07, 2024 11:35 PM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு உதவ, 14 ஆண்டுகளுக்கு முன் உள் விளையாட்டு அரங்க திட்டம் துவங்கப்பட்டது. 13.25 கோடி ரூபாய் செலவில், 2010 மே மாதம் 3ம் தேதி கட்டுமான பணி துவங்கியது. அப்போதைய எம்.பி., ராஜேஷ், 50 லட்சம் ரூபாய்; ராஜ்யசபா எம்.பி.,இஸ்மாயில், 22 லட்சம் ரூபாய்; மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் சேர்ந்து, 65 லட்சம் ரூபாய் வழங்கினர். திட்டத்திற்காக மாவட்ட பஞ்சாயத்து சார்பில், ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. திட்டத்தின், 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், நிதி இல்லை எனக் கூறி, கட்டுமான பணிகள் கைவிடப்பட்டன.
உள்விளையாட்டு அரங்க சங்கம் முயற்சியால், 2021ல் அமைச்சரவை கூட்டத்தில் தொடர் கட்டுமானம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியில் இருந்து, 14.50 கோடி ரூபாய் அனுமதித்தனர்.
இந்நிலையில், வாலிபால், ெஷட்டில், பேட்மிண்டன், செஸ், பேஸ்பால், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், கபடி, கோகோ, நெட் பால் போன்ற உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளின் துவக்க விழா, நாளை (9ம் தேதி) நடக்கிறது. ஒரு ஆண்டில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
உள்விளையாட்டு அரங்கில், 1,200 பேர் அமரும் வகையில் கேலரி, மூன்று மாடிகளில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் 40 அறைகள், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கான, 15 அறைகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.