ADDED : ஏப் 30, 2024 10:24 PM

விஜயபுரா: ''சுதந்திரத்துக்கு பின், நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் உறுதியான அடித்தளம் அமைத்ததால், இன்று இந்தியா வலுவாக உள்ளது,'' என, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
விஜயபுராவில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அலகூரை ஆதரித்து, நேற்று ஜாலகிரி கிராமத்தில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் பிரசாரம் செய்தபோது கூறியதாவது:
இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடு, இன்னும் வளர்ச்சிக்காக போராடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் சுதந்திரத்துக்குப் பின், காங்கிரஸ் உறுதியான அடித்தளம் அமைத்ததால், இன்று இந்தியா வலுவாக உள்ளது.
மோடியின் பொய்யான வாக்குறுதியை இளைஞர்கள் உட்பட அனைவரும் உணர்ந்துள்ளனர். இம்முறை அவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். நீதி கேட்டு போராடிய விவசாயிகள் மீது லத்தியால் அடித்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து ஒடுக்கப்பட்டனர். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், அவற்றை வாங்கியவர்களின் பெயரை ரகசியமாக வைத்து பெரும் மோசடி செய்தனர்.
பிரதமர் மோடியின் நேர்மை முகமூடி அவிழ்ந்துவிட்டது.
ஊழல் விவகாரத்தை விட்டு, விட்டு உணர்ச்சிகரமான பிரச்னையை முன்வைத்து அவர் ஓட்டுக் கேட்கிறார்.
இத்தொகுதியின் தக்கலக்கி, ஜலகேரியை சுற்றி உள்ள மற்ற பகுதிகளுக்கு வரும் நாட்களில் பாசன வசதி ஏற்படுத்தப்படும். இப்பகுதியில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் இப்பகுதி விவசாயிகளின் வயல்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஜாலகிரி கிராமத்தில் பிரசார கூட்டத்தில், அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேசினார். இடம்: விஜயபுரா.