நக்சல்கள் அச்சுறுத்தலில் இருந்து 2026ல் நாடு விடுபடும்: அமித் ஷா
நக்சல்கள் அச்சுறுத்தலில் இருந்து 2026ல் நாடு விடுபடும்: அமித் ஷா
UPDATED : ஆக 25, 2024 05:49 AM
ADDED : ஆக 25, 2024 12:54 AM

ராய்ப்பூர “வரும், 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல்கள் அச்சுறுத்தலில் இருந்து நாடு முழுமையாக விடுபடும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துஉள்ளார்.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள்ஆதிக்கம் இருப்பதை அடுத்து, அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சத்தீஸ்கரில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், மூன்று ஆண்டுகளில் அங்குள்ள நக்சல்கள் ஒழிக்கப்படுவர்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நக்சல்கள் பாதிப்புள்ள பகுதிகளில் அமித் ஷா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அமித் ஷா கூறியதாவது:
நாட்டில் 17,000க்கும் அதிகமான உயிர்களை கொன்ற நக்சல் அமைப்புகள், நமக்கு பெரும் சவாலாக உள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், கடந்த 10 ஆண்டுகளில் நக்சல்களின் எண்ணிக்கை, 53 சதவீதம் குறைந்துள்ளது. அவர்களை அழிப்பதற்கு இறுதி அடியை எடுத்து வைக்க வேண்டிய நேரம் இது.
நக்சல்களுக்கு எதிரான இறுதி தாக்குதலை துவங்க வலுவான, இரக்கமற்ற உத்திகள் அவசியம். பாதுகாப்பு படைகளைத் தாண்டி, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை அவர்களின் நிதியை முடக்கி வருகின்றன.
வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நக்சல்கள் அச்சுறுத்தல்களில் இருந்து நாடு முழுமையாக விடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.